வெள்ளி, 8 மே, 2026

TN Board 12th (+2) HSE Result 2026+2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு; மாணவிகள் 97%, மாணவர்கள் 93.19% தேர்ச்சி

 

New Project (1)

Tamil Nadu Class 12th Result 2026 Live Updates: தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (TNDGE), பிளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகளை மே 8-ஆம் தேதி காலை 9:30 மணிக்கு வெளியிடுகிறது. தேர்வுகள் முடிவடைந்த பிறகு, மாணவர்கள் தங்கள் முடிவுகளை tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் பார்க்கலாம். மேலும், மதிப்பெண் சான்றிதழ்களை டிஜிலாக்கர் (DigiLocker) மூலமாகவும் பெற்றுக்கொள்ளலாம். மேல்நிலைத் தேர்வு முடிவுகள், துணைத் தேர்வுகள் குறித்த கூடுதல் விவரங்களுக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தைப் பார்க்கவும்.

தமிழ்நாட்டில் பிளஸ் டூ பொதுத்தேர்வுகள் 2026 மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை, மாநிலம் முழுவதும் 3,412 மையங்களில் நடைபெற்றன. தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுடன் தேர்வுகள் தொடங்கின. இந்தத் தேர்வெழுத 7.99 லட்சம் பள்ளி மாணவர்கள் மற்றும் 27,783 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8,27,475 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.

தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் பிளஸ் டூ துணைத் தேர்வெழுத வேண்டியிருக்கும். இது குறித்த விரிவான அறிவிப்பு விரைவில் வெளியாகும். கடந்த ஆண்டு, ஜூன் 25 முதல் ஜூலை 2 வரை துணைத் தேர்வுகள் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் ஜூலை 25-ல் வெளியிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 8, 2026) காலை 9:30 மணிக்கு வெளியாகின. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ (DPI) வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன் அதிகாரப்பூர்வமாக முடிவுகளை வெளியிட்டார்.

கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தத் தேர்வை, தமிழ்நாடு முழுவதும் சுமார் 8 லட்சம் மாணவர்கள் எழுதினர். ஏப்ரல் 6 முதல் 20-ஆம் தேதி வரை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், இன்று முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 95.20% ஆகப் பதிவாகியுள்ளது. தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 7.53 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

வழக்கம் போலவே இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாணவிகள்: 97% தேர்ச்சி

மாணவர்கள்: 93.19% தேர்ச்சி

மாவட்ட வாரியாக முதலிடம்

மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் 98.87% தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து:

சிவகங்கை: 98.05%

கன்னியாகுமரி: 97.63%

நெல்லை: 97.54%

திருச்சி: 97.50% ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

சதம் அடித்த மாணவர்கள் (100-க்கு 100)

பாடவாரியாக முழு மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 

கணினி அறிவியல்: 6,945 பேர்

கணினி பயன்பாடுகள்: 2,099 பேர்

கணக்குப் பதிவியல்: 1,946 பேர்

உயிரியல்: 784 பேர்

கணிதம்: 732 பேர்

வேதியியல்: 632 பேர்

வரலாறு: 282 பேர்

இயற்பியல்: 105 பேர்

ஆங்கிலம்: 91 பேர்

தமிழ்: 83 பேர்

ஏதேனும் ஒரு பாடத்தில் மட்டும் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் மொத்த எண்ணிக்கை 16,024 ஆகும்.

பள்ளி வாரியான தேர்ச்சி

மாநிலம் முழுவதும் மொத்தம் 2,639 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளன. பள்ளிகளின் வகைப்பாட்டின்படி தேர்ச்சி விகிதம் பின்வருமாறு:

தனியார் பள்ளிகள்: 98.72%

அரசு உதவி பெறும் பள்ளிகள்: 96.14%

அரசுப் பள்ளிகள்: 92.16%

இதுதவிர தேர்வெழுதிய 8,855 மாற்றுத்திறனாளி மாணவர்களில் 6,811 பேரும் (76.92%), 250 சிறைவாசிகளில் 238 பேர் (95.20%) தேர்ச்சி பெற்றுள்ளனர். தனித்தேர்வர்களாக தேர்வெழுதிய 25,521 பேரில் 6,171 பேர் (24.18%) மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.

முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?

மாணவர்கள் தங்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி அதிகாரப்பூர்வ இணையதளங்களில் முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்:

மேலும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் முடிவுகள் அனுப்பப்பட்டுள்ளன. 7845252525 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் முடிவுகளை அறிய வசதி செய்யப்பட்டுள்ளது.

தேர்வு முடிவுகளில் ஏதேனும் மன அழுத்தம் அல்லது ஆலோசனைகள் தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்காக 14417, 104, 14416 ஆகிய உதவி எண்களை அரசு அறிவித்துள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வரும் மே 13-ஆம் தேதி வழங்கப்படும். தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பாக, ஜூன் 28 முதல் ஜூலை 7 வரை துணைத்தேர்வுகள் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

source https://tamil.indianexpress.com/education-jobs/tn-12th-result-2026-out-live-updates-direct-link-to-check-tn-hsc-plus-two-result-at-tnresults-nic-in-dge-tn-gov-indigilocker-11811937