கொடைக்கானல் மலையில் ஒரு வாரமாக எரியும் காட்டு தீ – அரிய வகை மூலிகை செடிகள் நாசம்
கொடைக்கானல்: கொடைக்கானல் வனப்பகுதியில் கடந்த ஒரு வாரமாக எரிந்து வரும் காட்டு தீயால் அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாயின. காட்டு தீயை அணைக்க வனத்துறையினர் போராடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் டம்டம் பாறை வனப்பகுதியில் கடந்த கடந்த ஒரு வாரமாக காட்டு தீ பற்றி எரிந்து வருகிறது. காற்றின் வேகத்தின் காரணமாக காட்டுத் தீ கொழுந்து விட்டு எரிகிறது. இதனால் வனப்பகுதியில் உள்ள விலை உயர்ந்த தேக்கு, பலா உள்ளிட்ட மரங்களும் அரிய வகை மூலிகை செடிகளும் எரிந்து நாசமாகியுள்ளது. தொடர்ந்து பரவி வரும் காட்டுத் தீயினால் அந்த பகுதி புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் மற்றும் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வனப்பகுதியில் அரிய வகை சிங்க வால் குரங்குகள், சிறுத்தை, மான் ஆகிய விலங்குகள் உள்ளதால், காட்டுத்தீயில் இருந்து அவற்றை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.