வீட்டை வடிவமைக்கும் போது எது புது டிரண்டு, எது பழைய டிரண்டு என்ற குழப்பத்தில் இருக்கிறீர்களா? கடந்த ஆண்டு டிரண்டிங்கில் இருந்த சில பொருட்கள், இந்த ஆண்டும் டிரண்டிங்கில் இருக்கின்றன. அதேமாதிரி, சில புதிய வடிவமைப்பு டிரண்டுகளும் இந்த ஆண்டு அறிமுகமாகி யிருக்கின்றன. அவற்றைத் தெரிந்து கொண்டால், வீட்டை எளிமையாக ‘அப்டேட்’ செய்துவிடலாம். அப்படி, டிரண்டிங்கில் இருக்கும் சில வடிவமைப்புகள்:
கிராஃபிக் டைல்ஸ்
இந்த டிரண்டு நீண்ட காலமாக இருப்பதாகத் தோன்றலாம். ஆனால், இன்னும் சில காலங்களுக்கு இந்த டிரண்டு நீடிக்கப்போகிறது. கிராஃபிக் டைல்ஸ் வீட்டின் தோற்றத்தைப் பிரம்மாண்டமாக்கிக் காட்ட உதவும். அத்துடன், வீட்டுக்கு ஒரு பாரம்பரிய தோற்றத்தையும் கொடுக்கும். இந்த டைல்ஸ் நீண்ட காலத்துக்கு உங்கள் வீட்டில் இருக்கும் என்பதால், அதன் வடிவமைப்பை உங்கள் ரசனைக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுப்பது நல்லது. வீட்டின் சுவர்களை அலங்கரிக்க இந்த கிராஃபிக் டைல்ஸ் சிறந்த தேர்வு.
பிரியும் சோஃபாக்கள்
‘செக் ஷனல் சோஃபாக்கள்’ எனப்படும் இந்தப் பிரியும் சோஃபாக்கள் இந்த ஆண்டும் வீட்டின் வரவேற்பறையை அலங்கரிக்கப்போகின்றன. சிறிய வரவேற்பறையிலும் இந்த ‘செக் ஷனல் சோஃபா’க்களைப் பயன்படுத்தமுடியும். இந்த சோஃபாவை அறையின் மூலைகளில் வைப்பதால், வரவேற்பறையின் நடுவே நிறைய இடம் கிடைக்கும். ‘எல்’, ‘யூ’, ‘அரை வட்டம்’ போன்ற வடிவங்களில் இந்த சோஃபாக்கள் கிடைக்கின்றன.
கருப்பு ஜன்னல் ஃப்ரேம்கள்
ஜன்னல்களைக் கருப்பு ஃப்ரேம்களுடன் வடிவமைப்பது இப்போதைய டிரண்டுகளில் ஒன்று. ஜன்னல்கள் வீட்டுக்கு வெளிச்சத்தைக் கொண்டுவருவதோடு மட்டுமல்லாமல் வீட்டின் வடிவமைப்பிலும் ஜன்னல்களுக்கு முக்கிய இடம் உண்டு. அதனால், இந்தக் கருப்பு ஜன்னல்கள் ஃப்ரேம்கள் டிரண்டுக்கு வந்திருக்கின்றன.
படிக்கட்டுகளும், மையப்புள்ளியும்
படிக்கட்டுகள் அறையின் மையப்புள்ளியில் (Focal point) வந்து முடியும்படி வடிவமைப்பதும் இந்த ஆண்டின் டிரண்டாக இருக்கும். இந்த வடிவமைப்பு அறையின் தோற்றத்தைக் கூடுதல் அர்த்தமுள்ளதாக்கும்.
காற்று வரட்டும்
அறைகளின் பிரிப்பான்களை இப்போது காற்றோட்டத்துடன் அமைப்பது அதிகரித்துவருகிறது. இந்தக் காற்றோட்டமான பிரிப்பான்களால் எல்லா அறைகளுக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்தமுடியும். சமையலைறையில் வேலைப்பார்த்துக்கொண்டே குழந்தைகள் அறையைக் கண்காணிக்கும் வசதியை இந்தக் காற்றோட்டமான பிரிப்பான்கள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.
அலங்கார விளக்குகள்
அறைகளில் அலங்கார விளக்குகளை அமைப்பது எப்போதும் இருக்கும் டிரண்டுதான். எளிமையான அறையைக்கூட ஒரே அழகான விளக்கை வைத்துப் பிரம்மாண்டமாக மாற்ற முடியும்.
சாப்பிடும் அறை தேவையில்லை
வீடுகளில் வரவேற்பறையே அருகிவரும் இந்தக் காலக்கட்டத்தில் சாப்பிடும் அறை தேவையில்லை என்று சொல்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை. தனியாகச் சாப்பிடும் அறை அமைப்பது இப்போதைய டிரண்டு இல்லை. அதற்குப் பதிலாக சமையலறை மேசையின் ஒரு பகுதியைச் சாப்பாட்டு மேசையாகப் பயன்படுத்துவது அதிகரித்திருக்கிறது.
பொருந்தாத பொருட்கள்
இந்த டிரண்டில் ‘மிஸ்மேட்ச்சிங்’ வடிவமைப்பும் இருக்கிறது. முற்றிலும் பொருந்தாத ஒரு பொருளை வைத்து ஒரு வடிமைப்பை உருவாக்குவதுதான் ‘மிஸ்மேட்ச்சிங்’ வடிவமைப்பு. இந்த வடிவமைப்பைச் சரியாகச் செய்தால் வீட்டை வித்தியாசமாக அலங்கரிக்க முடியும்.