தமிழகத்தில், விவசாய பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. விவசாய நிலங்கள் எல்லாம், ‘ரியல் எஸ்டேட்’காரர்களிடம் சிக்கி, வீட்டு மனைகளாக மாறிவிட்டன. இதைக்கண்டு உள்ளம் குமுறுவோருக்கு ஆறுதலாக, மண் இல்லா விவசாய முறையை, தனது வீட்டு மாடியில் அமல்படுத்தி சாதித்துகாட்டியுள்ளார் கோவை, சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த பேராசிரியர் நாகேந்திரன்.
எம்.இ., எலக்ட்ரானிக்ஸ் முடித்த இவர், 10 ஆண்டுகளாக இன்ஜி., கல்லுாரிகளில் பேராசிரியராக பணியாற்றிவிட்டு, தற்போது, ‘ஏரோபோனிக்ஸ்’ விவசாய திட்டம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். விவசாயத்தின் முக்கிய உயிர்நாடி மண் வளம்; பயிர்கள் வேர் பிடிக்க மண் அவசியமான ஒன்று. ஆனால், இவர், மண்ணே இல்லாமல் செடி வளர்த்து, இரண்டு ஆண்டுகளாக சத்தான காய்கறிகளை உற்பத்தி செய்து வருகிறார்.
தனது வீட்டின் மொட்டை மாடியில் ‘மண்ணில்லா பல அடுக்கு விவசாயம்’ செய்கிறார்; கண்காணிக்க ஆள் தேவையில்லை; நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட அனைத்தையும் கம்ப்யூட்டர் கவனிக்கிறது. விவசாயிகள் துாவும் உரம், சில நேரத்தில் மண்ணில் தங்கி, மண்வளத்தை கெடுக்கலாம். ஆனால், இவரது மாற்று விவசாய முறையில் மண் வளம் பாதுகாக்கப்படுகிறது.
ஐநுாறு சதுர அடி பரப்புள்ள, மொட்டை மாடி தான் இவரது பசுமைத் தோட்டம். பி.வி.சி., குழாய்களில் பயிர் வளர்கிறது. ஏறக்குறைய ஒவ்வொரு குழாயிலும் 150 செடிகள் வளரும் அளவுக்கு, சிறு துளைகள் போடப்பட்டு நாற்றுகள் பிடிப்புடன் வைக்கப்பட்டுள்ளன (மண் இல்லை). வளர்ந்த செடிகள் கீழே சரியாமல் இருக்க, அதன் கிளைகள் நுாலால் கட்டப்பட்டுள்ளன.

செடிகளின் வேர்களுக்கு நீர் பாய்வதில்லை; மாறாக செடிகளின் மீது, தானியங்கி முறையில் நீர் (ஸ்பிரிங்லர்) தெளிக்கப்படுகிறது. தினமும் குறைந்தது, 7 நிமிடம் தண்ணீர் தெளிக்கப்படுகிறது. இலை, காய் வளர்ச்சிக்கே இங்கு முக்கியத்துவம். மொட்டை மாடி தோட்டத்துக்குள் வெய்யில் நுழைவதில்லை. சணல் சாரம், கூடாரம் போன்று அமைக்கப்பட்டுள்ளது. வெய்யிலால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் கூடும்போது மேற்குபகுதி நீர் தெளித்து குளிரூட்டப்படுகிறது. இதற்காக சிறு துளைகள் வழியாக, மேலிருந்து தண்ணீர் துாவப்படுகிறது.
தண்ணீர் தெளிப்பு உள்ளிட்ட அனைத்துக்கும், 300 வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின்னுற்பத்தி சாதனம் உதவுகிறது. அறையின் ஈரப்பதமும், தட்பவெப்ப நிலையும், எப்போதும் பாதுகாக்கப்படுகிறது. இதுகுறித்து, நாகேந்திரன் கூறியதாவது: ஐநுாறு சதுரடி பரப்பளவு தோட்டத்தில் வளர்க்கப்படும் 1000 செடிகளுக்கு தினமும், 250 லி., நீர் போதுமானது. ஒரு கிலோ தக்காளி உற்பத்திக்கு 1.50 ரூபாய் மட்டுமே செலவாகிறது. ஒரு சென்ட் நிலத்தில் மாதம், 15 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கும் அளவுக்கு நவீன விவசாயம் இஸ்ரேல், கனடா, தாய்லாந்து, ஜெர்மனி நாடுகளில் நடைமுறையில் உள்ளது. சிங்கப்பூரில் இத்திட்டத்துக்காக, அந்நாட்டு அரசு பெரும் உதவி
செய்கிறது.குறிப்பிட்ட கால இடைவெளியில், சீரான தண்ணீர் வினியோகம் இருப்பதால் அனைத்து செடிகளும் ஒரே மாதிரியாக வளர்கிறது. நோய், பூச்சி, புழு எதுவும் செடிகளை தாக்குவதில்லை. மண்ணில் காய்க்கும் செடிகளை விட உயரமாக வளர்கிறது. இதன் காய்களும், பழங்களும் சத்து மிக்கதாக உள்ளது. விளைநிலங்கள் காணாமல் போகும் இக்காலகட்டத்தில், இத்திட்டத்தை பயன்படுத்தி, எதற்கும் பயன்படாத தரிசு நிலங்களையும் பசுஞ்சோலைகளாக்க முடியும். நாட்டின் காய்கறி உற்பத்தியை மட்டுமல்ல, உணவு பற்றாக்குறையையும் தீர்க்க முடியும். விவசாய ஆர்வலர்கள், சந்தேகங்களுக்கு, 95852 86005 என்ற எண்ணில் என்னை
தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, பேராசிரியர் நாகேந்திரன் கூறினார்.