செவ்வாய், 29 மார்ச், 2016

சைப்ரஸ் தீவில் குடியேறவும் முன்னாள் மனைவியை சந்திக்கவும் அனுமதி வேண்டும்: எகிப்து விமானத்தை கடத்தியவன் கோரிக்கை


94cadb9e1eca8810940f6a70670077feகெய்ரோ, மார்ச் 29-

எகிப்து நாட்டின் துறைமுக நகரமான அலெக்சாண்ட்ரியாவில் இருந்து தலைநகர் கெய்ரோ நோக்கி சென்ற விமானத்தை ஒரு தீவிரவாதி கடத்தினான்.

கடத்தப்பட்ட எகிப்து நாட்டுக்கு சொந்தமான MS181 தடம் எண் கொண்ட அந்த விமானத்தில் 55 பயணிகளும், விமானி உள்பட ஏழு பேரும் இருந்ததாக தெரியவந்தது. 

அந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் உள்ள சைப்ரஸ் தீவில் உள்ள லர்னாகா விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள நிலையில் விமானத்தை கடத்தியவன் தனது இடுப்பில் வெடிகுண்டுடன் கூடிய பெல்ட்டை கட்டியுள்ளதாகவும், எனவே, தரையிறக்கப்பட்ட விமானத்தின் அருகே யாரும் செல்ல வேண்டாம் எனவும் சைப்ரஸ் விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்தனர். 

அந்த விமானத்தில் இருந்து பெண்கள், குழந்தைகள் மட்டும் வெளியே செல்ல கடத்தல்காரன் அனுமதி அளித்தான். இதையடுத்து, சுமார் 40 பேர் வெளியேறிய பின்னர் 10 அமெரிக்க பயணிகள் மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த எட்டு பயணிகளை பிணைக்கைதிகளாக கடத்தல்காரர்கள் பிடித்து வைத்துள்ளதாக சைப்ரஸ் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தனக்கு சைப்ரஸ் தீவில் குடியேற அனுமதி அளிக்க வேண்டும். இல்லாவிட்டால், விமானத்தை தகர்த்து விடுவேன் என கடத்தல்காரன் சைப்ரஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளான். அவனது இந்த கோரிக்கை தொடர்பாக சைப்ரஸ் அரசு அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சைப்ரஸ் நாட்டு பெண்ணான தனது முன்னாள் மனைவியை சந்தித்துப்பேச வேண்டும் எனவும் அந்த கடத்தல்காரன் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், இதையடுத்து, அவன் போலீசாருக்கு அளித்த ஒரு கடிதத்தில் உள்ள முகவரியின் அடிப்படையில் அந்தப் பெண்ணை கண்டுபிடித்த போலீசார், அந்தப் பெண்ணை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.