வியாழன், 31 மார்ச், 2016

சூடாக காப்பி, டீ குடிப்பவரா?


சூடாக குடிப்பவர் என்றால், இனி கொஞ்சம் சூட்டை குறைத்துக்கொண்டு விடுங்கள்!
“மிகவும் சூடாக டீ குடிப்பதால் உணவுக்குழாய் கேன்சர் வரும் ஆபத்து அதிகமாக இருக்கிறது’ என்று இந்திய மருத்துவ நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.”
இந்த ஆய்வு முடிவை, சர்வதேச நிபுணர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
காபி, டீ மற்றும் சில வகை பானங்களை சூடாக சாப்பிடுவதை பலரும் விரும்புகின்றனர்.
சிலர் தான், நன்றாக சூடு ஆறிய பின் குடிக்கும் பழக்கம் கொண்டுள்ளனர். இது ஒரு வகையில் உடலுக்கு மிகவும் நல்லது என்று தெரிகிறது.
தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ் நாட்டில் தான் காபி குடிக்கும் பழக்கம் பரவலாக உள்ளது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எடுத்துக்கொண்டால், எவருமே டீ குடிப்பதை தான் விரும்புகின்றனர்.
காலையிலும் டீ குடித்தால் தான் பத்திரிகை யையே படிக்க தோன்றும் சிலருக்கு; இன்னும் சிலருக்கு படுக்கையிலேயே டீ வந்தாக வேண்டும். “பெட் டீ’ குடித்தபின் தான் திருப்பள்ளியெழுச்சி நடக்கும். அந்த அளவுக்கு டீ மோகம் உள்ளது.
“காலையில் எழுந்தாலும் சரி, மற்ற நேரங்களிலும், சூடா ஒரு டீ குடித்தால் போதும்… உடல் இன்ஜினுக்கு பெட்ரோல் போட்ட மாதிரி; அப்புறம் தான் வேலையே ஓடும்’ என்று பலர் குறிப்பிடுவதை கேட்டிருப்பீர்கள்.
ஆபீசில் வேலை செய்வோரும், தொழிற் சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களும் மணிக்கொரு தரம் டீ குடித்தால் தான் சோர்வு நீங்கியது போல உணர்வர்; தம்மாத்தூண்டு டம்ளரில் கொடுத்தாலும், அதை குடித்தால் தான் சுறுசுறுப்பே வரும்.
அதிக சூடாக டீ குடிப்பதால் ஏற்படும் உடல் கோளாறு பற்றி கடந்த சில ஆண்டாக மேற்கொண்டு வந்த ஆய்வில் இந்திய நிபுணர்கள் ஆபத்தான சில உண்மைகளை கண்டுபிடித்துள்ளனர்.
ஆய்வு முடிவுகளில் அவர்கள் கூறியிருக்கும் சில தகவல்கள்:
* வாய் முதல் இரைப்பை வரை உள்ள உணவுக்குழாய் மிகவும் மிருதுவானது; குறிப்பிட்ட அளவில் தான் சூட்டை அது தாங்கும். அதிகமானால், அதன் சுவர் அரிக்கத் துவங்கி விடும்.
* அதிகமான சூட்டுடன் டீ குடித்தால் , உணவுக்குழாய் சுவர்கள் வெகுவாக பாதிக்கப்படுகின்றன; அதன் சுவர்கள் அரிக்கப்பட்டு, திசுக்கள் பலவீனம் அடைகின்றன.
* இதனால், சுவர்ப்பகுதியில் உணவுக்குழாய் கேன்சர் கட்டி ஏற்படும் ஆபத்து உள்ளது. மற்றவர்களை விட, சில பழக்க வழக்கங்களை கடைபிடிப்பவர்களுக்கு கேன்சர் ஆபத்து அதிகம்.
* பான் பராக், புகையிலை போன்றவற்றை சுவைப்பவர்களுக்கு 1.1 மடங்கு கேன்சர் வாய்ப்பு அதிகம்.
* பீடி குடிப்போருக்கு 1.8 மடங்கு கேன்சர் ஆபத்து உள்ளது.
* சிகரெட் பிடிப்போருக்கு இரண்டு மடங்கு கேன்சர் அபாயம் உள்ளது.
* மது குடிப்போருக்கு கேன்சர் அபாயம் 1.8 மடங்கு.
* அதிக சூட்டுடன் டீ குடிப்போருக்கு, கேன்சர் வரும் வாய்ப்பு இவர்களை விட, நான்கு மடங்கு அதிகமாக உள்ளது.
* வெயில் பருவத்தை விட குளிர்காலத்தில், குளிர் பிரதேசத்தில் உள்ளவர்கள் சூடாக டீ குடித்தால் அவர்களுக்கு இந்த வாய்ப்பு அதிகம்.
* சூடான பிரதேசங்களில் உள்ளவர்களுக்கு ஓரளவு பாதிப்பு வாய்ப்பு குறைவு தான்.
இவ்வாறு ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.
மும்பையில் உள்ள டாடா நினைவு மருத்துவமனை நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.
இவர்களின் ஆய்வு முடிவுகளை சர்வதேச நிபுணர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
டாடா நிபுணர்கள்,தங்கள் ஆய்வுக்கு காஷ்மீரில் 1,500 பேரிடம் சர்வே எடுத்துள்ளனர். அவர்களில் அதிக சூடாக டீ குடிப்போருக்கு கேன்சர் ஆபத்து உள்ளதை உறுதி செய்தனர்.
ஆண்டுக்கு, இப்படிப்பட்டவர்களில் சராசரியாக 800 பேருக்கு கேன்சர் வருவதும் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் சர்வதேச கேன்சர் ஆராய்ச்சி இதழ், “இன்டர்நேஷனல் கேன்சர் எபிடமாலஜி’யில் இந்த ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.
அது சரி, நீங்கள் அதிக சூடாக டீ குடிப்பவரா? அப்படீன்னா, இனி குடிக்க மாட்டீங்கல்ல..