புதன், 30 மார்ச், 2016

படித்தது 8ஆம் வகுப்பு ஆண்டு வருமானமே 300கோடி ரூபாய்: கலக்கும் ஈரோட்டுக்காரர்


L2lQibSPstudyவெறும் எட்டாவது வரை மட்டுமே படித்த ஒருவர் இன்றைக்கு பெரிய தொழிலதிபராக இருக்க முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கிறார் மில்க்கி மிஸ்ட் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் சதீஷ்குமார். ஈரோட்டிலிருந்து கோபிசெட்டிபாளையம் செல்லும் சாலையில் 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது சித்தோடு. 
இங்குதான் இருக்கிறது சதீஷ்குமாரின் மில்க்கி மிஸ்ட் தொழிற்சாலை. சித்தோடுக்கு அருகே தயிர்பாளையத்தில் பிறந்த இவர், இன்று தயிர் விற்பனையில் கொடிகட்டிப் பறக்கிறார். பாலில் தண்ணீர் கலந்து சம்பாதிக்கும் இந்தக் காலத்தில் பாலில் இருக்கும் தண்ணீரை எடுத்து சம்பாதிக்கிறார்.  நாம் அவரது தொழிற்சாலைக்குள் நுழைந்து பார்த்த போது, தலையில் கேப்போடு அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தார். நாம் அவரை சந்தித்து நம்மை அறிமுகப்படுத்திக்கொண்டோம். ‘‘வாங்களேன் பேசலாம்’’ என்றபடி அவர் தனது கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘எங்க குடும்பம் விவசாயக் குடும்பம். ஆனா, எங்க அப்பா விவசாயத்தை விட்டுட்டு வேற தொழில் பண்ணனும்னு நெனைச்சி பவர்லூம் ஆரம்பிச்சாரு. அதுல அவரால ஜெயிக்க முடியல. அதனால 1985-ல சின்னதா ஒரு பால் பண்ணை ஆரம்பிச்சி, பாலை பெங்களூருக்கு அனுப்பிட்டு இருந்தாரு. ஆனா, அதுல ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் நஷ்டம் வர ஆரம்பிச்சிருச்சு. அதனால பால் பண்ணைய மூடிரலாம்னு அப்பா யோசிச்சாரு.
அப்ப நான் எட்டாவது தான் படிச்சிட்டுருந்தேன். உடனே இந்த தொழில நாம செஞ்சா என்னன்னு தோணுச்சி. காரணம், எனக்கு படிப்புலயும் ஆர்வமில்ல. அதோட விவசாயம் செய்யவும் பிடிக்கல. அதனால் ஏதாவது ஒரு தொழில் செஞ்சுதான் பொழைக்கனும்ங்கிற எண்ணம் வந்துருச்சு. வேற எதுவும் யோசிக்காம நம்மகிட்ட பால் வாங்குற பெங்களூர்காரங்க அந்த பாலை என்ன பண்றாங்கன்னு விசாரிச்சேன். அவங்க அதுல பன்னீர் தயாரிச்சு, அதை ஹோட்டல்களுக்கு சப்ளை பண்றத தெரிஞ்சிகிட்டேன். அதை எப்படி தயாரிக்கிறதுன்னு அவங்ககிட்ட கேட்டப்ப, அதை சொல்லித் தர மாட்டேன்னுட்டாங்க. அதுக்காக நான் சோர்ந்துடாம, எப்படி தயாரிக்கிறதுன்னு தேடி அலைஞ்சப்ப, காய்ச்சின பால்ல வினிகர் சேர்த்து பன்னீர் செய்யலாம்னு ஒரு தகவல் கிடைச்சது. 
இதை உடனே செஞ்சு பார்த்துடனும்னு தோணுச்சு. ஒரு நாள் எங்க அப்பா வர்றதுக்குள்ள இதை தயாரிச்சி பார்த்துரனும்னு செய்ய ஆரம்பிச்சேன். முதல்ல பன்னீர் தயாரிச்சு அதுக்கு ஒரு வடிவம் குடுக்குறது எப்படின்னுகூட தெரியாம ஒரு பிளாஸ்டிக் டப்பை எடுத்து, அதுல பலகையை வச்சி, அப்புறம் அதுக்கு ஒரு ஷேப் கொடுத்தேன். அந்த நேரம் பார்த்து எங்க அப்பா வந்துட்டாரு. நான் செய்றதைப் பார்த்ததும், ‘‘அடடா, முன்னூறு லிட்டர் பாலை இப்படி கெடுத்துட்டீயேடா?’’ன்னு சொன்னாரு. ‘‘இல்லை, நான் புதுசா ஒன்னு ட்ரை பண்றேன். இது நல்லா வரும்னு நெனைக்கிறேன்’’னு சொன்னேன். எங்க அப்பாவும் ஒன்னும் சொல்லாம போய்ட்டாரு. 
அந்த பன்னீரை பெங்களூருக்கு அனுப்பினோம். வாங்கினவங்க இதுல இந்த பக்குவம் இப்படி இருக்கனும்னு சொன்னாங்க. அதையும் பண்ணோம். பிசினஸ் சக்ஸஸ் ஆயிடுச்சு. இப்படித்தான் என் தொழிலை நான் ஆரம்பிச்சேன்.
உடனே பால் பண்ணையை மூடிட்டு, வெளியில இருந்து பால் வாங்கி, அதுல பன்னீர் செஞ்சு, பல ஊர்களுக்கும் அனுப்பிகிட்டிருந்தேன். என் பிசினஸ் வளர்ந்துகிட்டே இருந்துச்சு.
93-ம் வருஷம் திடீர்ன்னு ஒரு பிரச்னை. பால் கொள்முதல் பண்றதுல சிக்கல் வந்துருச்சி. நேரடியா மாடு வச்சிருக்கவங்ககிட்ட பால் வாங்க முடியல. பால் வண்டில வாங்கினா, தரமில்லாத பாலைத்தான் தருவாங்க. அதனால பன்னீர் தயாரிக்கிறத விட்டுட்டோம்.
அடுத்த வருசமே மறுபடியும் பன்னீர் செய்யத் தொடங்கினோம். அப்படி தயாரிச்ச பன்னீர பெரிய பெரிய ஹோட்டல்களுக்கும், பெரிய நிறுவனங்களுக்கும் மட்டுமே சப்ளை பண்ண முடிஞ்சது. ஆனா, அப்படி வாங்குறவங்க கடன் சொல்றதுனு சில ஃபைனான்ஸ் பிரச்னை வந்துருச்சு. அப்படின்னா இதை ரீடெய்ல, அதாவது சில்லரையா விற்பனை செய்யனும்னு முடிவெடுத்தோம். அப்ப அதுக்கு ஒரு ப்ராண்ட் பேரு வேணும்னு நெனைச்சேன். இப்ப மாதிரி அப்ப எங்ககிட்ட கம்ப்யூட்டரெல்லாம் கிடையாது. அதனால ஒரு மெயில் சென்டருக்கு போய், பொதுவா ஒரு பெயரை தேர்ந்தெடுத்தோம். அப்ப நான் தேர்வு செஞ்ச பேருதான்  மில்க்கி மிஸ்ட். 
அப்புறம் 99-ல இதை கொஞ்சம் பெருசா பண்ணனும்னு பேங்க்ல 10 லட்ச ரூபா லோன் வாங்கி பால், பன்னீர் ரெண்டையும் மெஷின் வச்சி தயாரிக்க ஆரம்பிச்சோம். இன்னும் கொஞ்சம் கூடுதலா பண்ணனும்னா, விளம்பரம் செய்யனுமேன்னு போய் நண்பர்கிட்ட ஐடியா கேட்டோம். அப்ப அவர், நீங்கள் தயாரிக்கிற பொருளுக்கு சில்லர் (குளிர்சாதனப் பெட்டி) வேணும். அப்பதான் வியாபாரம் நல்லபடியா நடக்கும்னு சொன்னார். அதையும் செஞ்சி விளம்பரமும் குடுத்தோம். 
மில்க்கி மிஸ்ட்னா பன்னீர்னு எல்லாருக்கும் தெரிஞ்சிதே தவிர, அதனால ஒரு சதவிகிதம்கூட விற்பனை அதிகமாகல. அதுக்கான காரணமும் எங்களுக்கு புரியல. அப்புறம் தான் தெரிஞ்சிது எங்களோட புராடக்டை நாங்க குடுத்த சில்லர்ல கொஞ்சமா வச்சிட்டு, மீத இடத்துல வேற வேற பொருள வச்சிருந்தாங்க. இதுக்கு காரணம், பன்னீர்ங்கிறது தினமும் பயன்படுத்துற பொருள் இல்ல. அப்ப தினமும் பயன்படுத்துற பொருளை தயாரிக்கனும்னு முடிவெடுத் தோம்.
உடனே, தயிர் தயாரிக்க லாம்னு முடிவெடுத்து, அதையும் செஞ்சோம். மற்ற பொருள் தயாரிக்கிறதவிட தயிர் தயாரிக்கிறது ரொம்ப கஷ்டம். காரணம், நாம கொள்முதல் பண்ற ஒரு மாட்டோட பால்ல ஆன்டிபயாடிக் இருந்தா, மொத்த பாலும் தயிராகமலே போய்டும். இதனாலேயே பால் கொள்முதல் பண்ற இடத்துல நல்ல பாலைக் கண்டுபிடிக்க ஒரு ‘கிட்’ (Anbiotic Kit) தந்திருக்கோம்.  
முதல்ல நாங்க வியாபாரிங்க கிட்ட இருந்து பால் வாங்கிட்டு இருந்தோம். அவங்ககிட்டே இருந்து சுத்தமான பால் கிடைக்கல. அதனால நாங்க நேரடியாவே பால் கொள்முதல் பண்ண ஆரம்பிச்சோம். இன்னைக்கு ஏறக்குறைய 35,000 விவசாயிங்ககிட்ட இருந்து நேரடியா பாலை கொள்முதல் பண்றோம். தமிழகம் முழுக்க அஞ்சு இடத்துல நாங்க சில்லிங் சென்டர் வச்சிருக்கோம். 
அடுத்து, பட்டர் தயாரிச்சோம். இருபது விதமான பொருள்களை 110 விதமா தயாரிச்சோம். அதனால நிறைய கடைகளுக்கு சில்லர் கொடுக்க வேண்டியதாயிருச்சி. இன்னிக்கு 5,000 சில்லர் பாக்ஸ் (Visicooler) நாங்க குடுத்துருக்கோம். 
இதற்கடுத்து இன்னொரு சவால் வந்துச்சி.  எங்க டீலர்கிட்ட இருந்து கடைகளுக்கு பொருள கொண்டு போறதுக்குள்ள பொருள் கெட்டுப் போறதா புகார் வந்துச்சு. அதனால ஒவ்வொரு டீலருக்கும் ஒரு குளிரூட்டப்பட்ட வாகனம்  (Refrigerator van) குடுத்தோம். நாம தரமா தயாரிச்சிக் குடுத்த பொருள் அதே தரத்தோடு மக்களுக்கு போய் கிடைக்கும்ங்கிறதால அதையும் செஞ்சிருக்கோம்.
இப்ப எங்க ஃபேக்டரில 450 பேர் வேலை பார்க்குறாங்க. டெக்னாலஜி வளர்ந்துகிட்டே இருக்கு. டெக்னாலஜியை உள்ள கொண்டுவர கொண்டுவர நாம தயாரிக்கிற உணவுப் பொருள சுத்தமா, சுகாதாரமா தயாரிச்சு குடுக்க முடியும். தரத்தை முதல் நோக்கமா வச்சு நாங்க செயல்பட்றது னால, தொடர்ந்து வளர்ந்துட்டு வர்றோம்.            2007-08-ல எங்க டேர்ன் ஓவர் ரூ.13.78 கோடி. 2015-16-ல அது ரூ.290 கோடி.
நாம செய்ற தொழில நாம நேசிக்கனும். இப்ப இந்த தொழில்ல லாபம் வந்துருச்சி; இதை வச்சி வேற தொழில் செய்யனும்கிற எண்ணம் என்கிட்ட துளியும் இல்ல. இதையே இன்னும் எப்படி வளர்க்கிறதுன்னுதான் யோசிச்சிட்டு இருக்கேன். 
இன்னைக்கு இருக்குற இளைஞர்கள் படிச்சி முடிச்சி வேலை தேடி கிடைக்கலன்னு இருக்கற தோட, ஒரு தொழில செஞ்சா அடுத்த நாளே அதுல என்ன லாபம் கெடைக்கும்னு பார்க்குறாங்க. அப்படி இருக்கக் கூடாது. எந்த தொழிலையுமே கொஞ்சம் கொஞ்சமாத்தான் வளர்க்க முடியும். அதோட நம் மொத்த சிந்தனையும் அந்த தொழிலப் பத்தியே இருக்கனும். ஈடுபாடும் பொறுமையும் இருந்தா, எந்தத் தொழிலயும் தொய்வில்லாம நடத்தி ஜெயிக்க முடியும்.
என்னைப் பொறுத்தவரை, கல்வி அவசியம்தான்.  அதன் மூலமா நிறைய விஷயங்களை தெரிஞ்சிக் கலாம். வெளிவிஷயங்களை தெரிஞ்சிக்காம விடறது தப்பு. அப்படி தெரிஞ்சி கிட்டதாலதான் நான் இன்னைக்கு இந்த தொழில நல்ல முறையில நடத்திட்டுருக்கேன்’’ என்றார் வெற்றிப் பெருமிதத் துடன். இன்னும் பல உயரங்களைத் தொடுவார் இந்த சதீஷ்குமார் என்பதில் சந்தேகமே இல்லை!