வியாழன், 31 மார்ச், 2016

சத்தீஸ்கர்: மாவோயிஸ்டுகளின் கண்ணிவெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 7 பேர் பலி


dantewadaராய்ப்பூர், மார்ச் 30-

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் படை வீரர்கள் 7 பேர் பலியாகினர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த தண்டேவாடா மாவட்டத்தில், நிர்வாக பணிகளுக்காக நியமிக்கப்பட்ட மத்திய ரிசர்வ் படையினர் சாதாரண உடையில் வாகனங்களில் சென்றனர். மாலை 4 மணியளவில் காட்டுப்பகுதியில் மேலவாடா கிராமத்தில் சென்றபோது சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், ஒரு வாகனம் தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது. 

இதில், அந்த வாகனத்தில் சென்ற 7 வீரர்களும் உடல் சிதறி பலியாகினர். கண்ணிவெடி வெடித்த இடத்தில் 4 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. அந்த வாகனத்தில் இருந்த ஆயுதங்கள் அனைத்தையும் மாவோயிஸ்டுகள் திருடிச் சென்றுவிட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலும் படைகள் வரவழைக்கப்பட்டன.

பாதுகாப்பு படையினர் 7 பேர் பலியான தகவலை உள்துறை அமைச்சர் சட்டசபையில் தெரிவித்தார்.