ஞாயிறு, 27 மார்ச், 2016

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது


pranஉத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று பிற்பகல் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது. 

மொத்தம் 70 இடங்களை கொண்ட அம்மாநில சட்டசபையில் காங்கிரசுக்கு 36 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க.வுக்கு 28 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். அங்கு முதல் மந்திரி ஹரீஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது.

சமீபத்தில் முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுனா தலைமையில் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஹரீஷ்ராவத்தை எதிர்த்து போர்க்கொடி தூக்கி அதிருப்தி எம்.எல்.ஏ.க்களாக மாறினார்கள். அவர்கள் பா.ஜ.க.வின் 28 எம்.எல்.ஏ.க்களுடன் சேர்ந்து புதிய ஆட்சி அமைக்க முயன்று வருகிறார்கள்.

இதையடுத்து உத்தரகாண்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டதால் ஹரீஷ் ராவத் தனக்குள்ள பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபித்து காட்ட வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டார். அதன்படி நாளை (திங்கட்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடைபெறும் என்று சபாநாயகர் கோவிந்தசிங் அறிவித்துள்ளார்.

இதற்கிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 9 பேரையும் அவர் கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

9 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்கம் காரணமாக உத்தரகாண்ட் மாநில சட்ட சபையில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 70–ல் இருந்து 61 ஆக குறைந்துள்ளது. இதில் பெரும் பான்மையை நிரூபிக்க 32 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.

காங்கிரஸ் கட்சிக்கு 27 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். அவர்களுக்கு 6 சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. இதன்மூலம் காங்கிரசுக்கான மொத்த பலம் 33 ஆக உள்ளது. எனவே நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது எளிதான வெற்றியை பெற முடியும் என்று கூறப்படுகிறது.

ஆனால் 9 எம்.எல்.ஏ.க்களும் ஹரீஷ் ராவத்துக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் உத்தரகாண்ட் அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக ஹரீஷ்ராவத், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாக நேற்றிரவு பரபரப்பு குற்றச்சாட்டு வெளியானது. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இந்த குற்றச்சாட்டை வெளியிட்டனர்.

குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக சி.டி. ஒன்றை விஜய் பகுகுனா நேற்று டெல்லியில் வெளியிட்டார். அதில் ஹரீஷ் ராவத்தின் குதிரை பேரம் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடக்கும்போது தனக்கு ஆதரவளித்தால் கோடிக்கணக்கில் பணம் தருவதாக ஒரு இடைத்தரகர் பேசுவது போன்ற காட்சிகளும் அந்த சி.டி.யில் இடம் பெற்றுள்ளன.

அந்த சி.டி. தகவலை ஹரீஷ்ராவத் மறுத்தார். அந்த வீடியோ காட்சிகள் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

காங்கிரஸ் மேலிட தலைவர் அம்பிகாசோனி கூறுகையில், ‘‘உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முதலில் ஜனாதிபதியிடம் போனார்கள். பிறகு கவர்னர் உதவியை நாடினார்கள். கோர்ட்டுக்கும் சென்றனர். எதிலும் வெற்றி கிடைக்காததால் பா.ஜ.க.வினர் போலி வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளனர்’’ என்றார்.

இந்த நிலையில் பா.ஜ.க. தலைவர்கள், உத்தரகாண்ட் முதல்–மந்திரி ஹரீஷ்ராவத் பதவி விலக வேண்டும் என்று போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். பா.ஜ.க. பொதுச் செயலாளர் கைலாஷ் விஜய் நேற்று ஜனாதி பதியை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் அவர், ‘‘உத்தரகாண்டில் காங்கிரஸ் ஆட்சி தொடர தகுதி இல்லாமல் உள்ளது. எனவே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

இதையடுத்து, மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்றிரவு அவசரம், அவசரமாக கூட்டப்பட்டது. பிரதமர் மோடி அசாமில் இருந்து வந்ததும் இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது. சுமார் 1 மணி நேரம் நடந்த அந்த கூட்டத்தில் உத்தரகாண்ட் மாநில அரசியல் விவகாரம் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் மத்திய மந்திரிசபை கூடி இதுபற்றி ஆலோசித்தது. அப்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது பற்றி பேசப்பட்டது.

அதன்படி, ஏற்கனவே மாநில கவர்னர் செய்திருந்த பரிந்துரயை ஏற்று உத்தரகாண்ட் மாநிலத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் 356-வது பிரிவை பயன்படுத்தி, அங்கு சட்டசபையை முடக்கி கவர்னர் தலைமையிமான ஜனாதிபதி ஆட்சியை பிரகடணப்படுத்தும் உத்தரவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று கையொப்பமிட்டார்.

அதன் அடிப்படையில், இன்று பிற்பகலில் இருந்து உத்தரகாண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்தது.