சனி, 26 மார்ச், 2016

சாம்பிராணி,

கல் போன்று கடினத்தன்மை கொண்ட சாம்பிராணி, ஒரு மரத்தில் இருந்து எடுக்கப்படும் பாலின் இன்னொரு வடிவமே என்பதை நீங்கள் அறிவீர்களா?

சாம்பிராணி மரங்கள் என்று பொதுவாக அழைக்கப்படும் பிரங்கின்சென்ஸ் (Frankincense) என்ற மரம் வடிக்கும் பிசின் தான் சாம்பிராணியாக உருமாறுகிறது. இது பாஸ்வெல்லியா செர்ராட்டா (Boswellia serrata) என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
இந்தப் பிசின்தான் மெதுவாக இறுகி, ஒளிபுகும் தன்மையையும் எளிதில் எரியும் தன்மையையும் கொண்ட சாம்பிராணியாக உருமாறுகிறது. நவம்பர் மாதம் முதல் ஜூலை வரையிலான காலங்களில் இம்மரங்களிலிருந்து பால் அதிகமாக வடியும். ஆண்டு ஒன்றிற்கு ஒரு மரத்திலிருந்து 1 கி.கி வரையில் சாம்பிராணி பெற முடியும்.
சாம்பிராணிக்கு குங்கிலியம், மரத்துவெள்ளை, வெள்ளைக்கீரை, குமஞ்சம், பறங்கிச்சாம்பிராணி என்று பல பெயர்கள் உண்டு. நறுமணமிக்க புகையைத் தன்னுள்ளே வைத்திருந்தாலும், எரித்தால் மட்டுமே புகையாய் அந்த நறுமணத்தைத் தரும்.
இந்தியாவில் தமிழ்நாட்டிலும், குஜராத், அஸ்ஸாம், ராஜஸ்தான், பீகார், ஒரிஸா போன்ற மாநிலங்களிலும் இந்தச் சாம்பிராணி மரங்கள் காணப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கல்வராயன், சேர்வராயன் மலைச்சரிவுகளில் இந்த மரங்கள் அடர்ந்து காணப்படுகின்றன. இது உறுதியானது என்றாலும் எளிதில் அறுக்கவும், இழைக்கவும் முடியும். இந்த மரங்களில் இருந்து தீக்குச்சிகளும் தயாரிக்கப்படுகின்றன.
பண்டைக் காலம் தொட்டே சாம்பிராணியின் பயன்பாடு இருந்து வருகிறது. மாவீரன் மகா அலெக்ஸான்டர் சிறு வயதில் தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டில் இடம் கல்வி பயின்று கொண்டு இருக்கும் போது தன்னுடைய ஆசிரியருக்கு சாம்பிராணி தேவைப்பட்டதை உணர்ந்தார். பின்பு மாவீரனாக உலகை வெல்ல ஆரம்பித்த நேரத்தில் மேற்கத்திய நாடுகளின் படையெடுப்பின் போது மூட்டை மூட்டையாக சாம்பிராணியை தன்னுடைய ஆசிரியர் அரிஸ்ட்டாட்டிலுக்கு அனுப்பி வைத்தாராம்.
சாம்பிராணி மருத்துவப் பயனும் தருகிறது. சாம்பிராணி மரப் பிசினை நீருடன் சேர்த்துத் தயாரிக்கப்படும் மருந்து இருமல், காமாலை, நாட்பட்ட புண்கள், சொறி, சிரங்கு, படர்தாமரை போன்றவற்றுக்கு அருமருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.