தெலங்கானா மாநிலத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு 12 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா சிறப்பு சட்டசபைக் கூட்டத்தில் நேற்று நிறைவேறியது.
அதேபோல எஸ்.டி. பிரிவினருக்கான இட ஒதுக்கீடு 6 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்ட்டிரிய சமிதி கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் சந்திரசேகர் ராவ் இருந்து வருகிறார். மாநிலத்தில் உள்ள 12 சதவீத முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் தற்போது இருக்கும் 4 சதவீத இட ஒதுக்கீட்டை 12 சதவீதமாக உயர்த்துவேன் என தேர்தல் வாக்குறுதியில் சந்திரசேகர் ராவ் கூறி இருந்தார்.
இதையடுத்து, இந்த மசோதாவை நிறைவேற்றும் முனைப்பில், நேற்று அமைச்சரவை கூட்டப்பட்டு, இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, ‘பிற்படுத்தப்பட்டோர், பட்டியலிடப்பட்டோர், பழங்குடியினர் இட ஒதுக்கீடு மசோதா 2017’ மசோதாவை நிறைவேற்ற நேற்று சிறப்பு சட்டசபைக் கூட்டத்தொடர் கூட்டப்பட்டது.
கூட்டத்தொடர் தொடங்கியதும், முதல்வர் சந்திரசேகர் ராவ் இந்த மசோதாவை அறிமுகம் செய்தார். அப்போது பா.ஜனதா கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இருப்பினும் சட்டசபையில் பெரும்பான்மை பலத்தோடு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இனி இந்த மசோதா குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டு ஒப்புதல்பெறப்பட்டு சட்டமாகும்.
இந்த மசோதாவை அறிமுகம் செய்து முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசுகையில், “ முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீடு என்பது, மதத்தை அடிப்படையில் அமையவில்லை. அவர்களின் சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பதை கொண்டு இட ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை சில கட்சிகள்(பா.ஜனதா) அரசியலாக்கி வருகின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு மேல் இருக்ககூடாது என்பது தெரியும். ஆனால், தமிழகம் கடந்த 20 ஆண்டுகளாக 69சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி வருகிறது. இன்னும் 5 மாநிலங்கள் 50 சதவீதத்துக்கும் அதிகமாக இட ஒதுக்கீடு அளித்து வருகின்றன.
அப்படி இருக்கும்போது தெலங்கானா மாநிலத்துக்கு மட்டும் எப்படி மறுக்க முடியும்?. ஆதலால், இந்த இட ஒதுக்கீட்டை அரசமைப்புச் சட்டம் 9-ம் பிரிவில் சேர்க்கக் கூறி மத்திய அரசை வலியுறுத்துவோம். இதில் எந்த அரசமைப்பு சட்டதடையும் வராது. தெலங்கானாவில் உள்ள மக்கள் தொகையில் 90 சதவீதம் எஸ்.சி. எஸ்.டி. பி.சி. முஸ்லிம்கள் அப்படி இருக்கும் போது, எங்களின் ஒட்டுமொத்த இட ஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டதற்கும், நிறைவேற்றப்பட்டதற்கும் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, சட்டசபையில் இருந்து 5 எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.
மேலும், மாநிலத்தில் இட ஒதுக்கீடு முறையைக் கண்டித்து பா.ஜனதா கட்சியினர் சட்டசபையை நோக்கி பேரணி நடத்த முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.