ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

கோடைகால உணவுப் பழக்கம் குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள்! April 16, 2017

கோடைகால உணவுப் பழக்கம் குறித்து எச்சரிக்கும் மருத்துவர்கள்!


சூரியன் சுட்டெரிக்கும் கோடைக்காலம் தொடங்கிவிட்டது. கோடையில் நாம் உண்ணும் உணவுகளே நமக்கு எதிரியாகி விடுகிறது என்பதை பலரும் கவனிக்கத் தவறுவதில்லை. விழிப்புணர்வற்ற உணவுப் பழக்கத்தால் நாம் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது

சாலையெங்கும் கடைகள்..... அவ்வப்போது வயிற்றுப் பசியை அடக்க வடை, போண்டா, பீட்சா, பர்கர், சமோசா, பிரெட் ஆம்லெட் என விதவிதமான உணவு வகைகள். ஊடகம், மார்க்கெட்டிங் போன்ற துறைகளில் இருப்போரும், வேலை விஷயமாக வெளியில் செல்வோரும் அடிக்கடி அதிகம் நாடிச் செல்லும் கடைகள் இதுதான்.

ருசியாக இருந்தாலும், இந்த மாதிரியனா உணவுகளே நமக்கு வில்லனாகி விடுகின்றன என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். அதிலும், கோடைக் காலத்தில் உணவுப் பழக்கம் மிகவும் கட்டுக்குள் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர். ஆசைக்கு என நாம் சாப்பிடும் அசைவ உணவுகளும், இதர நொறுக்குத் தீனிகளும், தெருவோரக் கடை உணவுகளும் கிருமித் தொற்றை உருவாக்கிவிடுகின்றன. குடல் பிரச்னை, மலச்சிக்கல், இரைப்பை பிரச்னை முதல் கிட்னி பிரச்னை வரை கொண்டு சென்றுவிடுகின்றன. சரியான வெப்ப நிலையில் தயாரிக்கப்படாத உணவுகளால், நோய் வருகிறது என்று எச்சரிக்கிறார் குடல் மற்றும் வயிற்று நோய்க்கான மருத்துவர் கார்த்திக் குணசேகரன்.

கஞ்சி , களி, கூழ் என்பதுதான் நமது பாரம்பரிய உணவு. நோய் நெருங்கக் கூடாது என்பதற்காக, உணவையே மருந்தாக்கி வைத்திருந்தனர் நமது முன்னோர்கள். இட்லி, பனியாரம், அதிரசம் போன்ற தின்பண்டங்கள் உடலுக்கு கேடு விளைவிக்காதவை. ஆனால், காலப்போக்கில் மாறிப்போன நமது உணவுப் பழக்கமே, நோய்கள் வர முக்கியக் காரணம் என எச்சரிக்கிறது மருத்துவத்துறை. உணவில் கட்டுப்பாடுகளை வைத்துக்கொண்டால், இவை எதுவும் வராமல் தடுக்க முடியும் என்றும் ஆலோசனை சொல்கிறது.

நோய்கள் எதுவும் நம்மைத் தேடி வருவதில்லை மாறுபட்ட உணவுப் பழக்கங்களே நோய்க்கு நம் உடலைத் தயார்படுத்துகின்றன. உணவை மருந்தாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும், நோய் பரப்பும் காரணியாக இருந்துவிடக் கூடாது என்பதே நாம் கருத்தில் கொள்ள வேண்டிய உண்மை.

Related Posts: