வெள்ளி, 21 ஏப்ரல், 2017

உங்களுக்கு ஸ்மார்ட் கார்டு வரவில்லையா? அப்படின்னா உங்க குடும்ப அட்டையில் தவறுகள் இருக்கலாம். முழுமையான தகவல்கள் !!!

சேலம்
சேலத்தில் 2 இலட்சத்து 21 ஆயிரம் ரேசன் அட்டைகளில் விவரங்கள் தவறாக இருப்பதால் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படாமல் இருக்கிறது. எனவே, மக்கள் தங்களது ரேசன் அட்டைகளில் குறைபாடுகள் உள்ளதா? என ரே‌சன் கடை பணியாளரை அணுகி அனைத்து விவரங்களையும் சரிபார்த்துக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட வழங்கல் அலுவலர் ராம.துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் ராம.துரைமுருகன் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், “சேலம் மாவட்டத்தில் பழைய ரே‌சன் அட்டைகளுக்கு பதிலாக, புதிய ஸ்மார்ட் ரேசன் அட்டை அச்சடித்து வழங்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் 9 இலட்சத்துக்கும் மேற்பட்ட ரேசன் அட்டைகள் உள்ளன. அவற்றில் 4 இலட்சத்து 21 ஆயிரம் ரேசன் அட்டைகள், புதிய ஸ்மார்ட் ரேசன் அட்டைகளாக அச்சடித்து வழங்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரர்களின் செல்போன்களுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) வரும். அவர்கள், அதை ரே‌சன் கடைகளில் காண்பித்து புதிய ஸ்மார்ட் ரேசன் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், தற்போது நடைமுறையில் உள்ள (பழைய குடும்ப அட்டை) 2 இலட்சத்து 21 ஆயிரம் ரேசன் அட்டைகளுக்கு போதிய விவரங்கள் இடம் பெறாமல் இருக்கிறது.
அதாவத, குடும்ப தலைவர் புகைப்படம், ஊர் பெயர், விலாசம், பிறந்த தேதி, தந்தை / கணவர் பெயர் ஆகியவைகளில் பிழைகள் இருக்கின்றன. இது தொடர்பான விவரப்பட்டியல் ரேசன் அட்டை வாரியாக சம்பந்தப்பட்ட ரே‌சன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
எனவே, மக்கள் தங்களது ரேசன் அட்டைகளில் குறைபாடுகள் உள்ளதா? என ரே‌சன் கடை பணியாளரை அணுகி அனைத்து விவரங்களையும் சரிபார்த்து, தவறுகள் இருப்பின் சரியான விவரங்களை ரே‌சன் கடை விற்பனையாளரிடத்தில் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரேசன் கடைகளில் உள்ள பட்டியலில் தங்களது ரேசன் அட்டை எண் இடம் பெறவில்லை எனில் தங்களது விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளது என கருத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், ஸ்மார்ட் அட்டைக்கான குறுந்தகவல் சிலருக்கு வந்தும் அவை அழிந்து விட்டதாக புகார்கள் வந்துள்ளன. எனவே, அவ்வாறு அழிந்துபோனால், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று மீண்டும் மொபைல்போன் எண்ணைக் கொடுத்தால், புதிதாக குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படும்.
இன்னும் சிலர், செல்போன் எண்ணை மாற்றி இருப்பதால் ஸ்மார்ட் அட்டைக்கான குறுந்தகவல் வராமல் இருக்கலாம். எனவே, செல்போன் எண்களை மாற்றியவர்கள், வட்ட வழங்கல் அலுவலகத்திற்குச் சென்று மனு கொடுத்தால், அங்கு திருத்தம் செய்யப்படும்” என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.