#திருச்சி மாவட்டம் திருவெறும்பூரை சேர்ந்தவர் அமுதா. பட்டதாரியான இவர், பெண்களும் இயக்கக்கூடிய வகையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த பேட்டரியால் இயங்கும் ஆட்டோவை கண்டுபிடித்துள்ளார். இதுபற்றி அமுதா கூறியதாவது: கணவருடன் அடிக்கடி டெல்லி சென்று வருவேன். அங்கு பேட்டரி ஆட்டோவில் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. திருச்சியிலும் பேட்டரி ஆட்டோவை இயக்க வேண்டும் என நினைத்தேன். அதன் அடிப்படையில் இங்குள்ள சாலைக்கேற்ப மழைக்காலங்களில் பாதுகாத்து கொள்ளும் வடிவமைப்பில் பேட்டரி ஆட்டோவை தயாரித்தேன்.
பேட்டரியால் இயங்கும் ஆட்டோவை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. ஓட்டுனர் உரிமம் பெற வேண்டியது அவசியம். ஆட்டோவை இயக்க 4 பேட்டரிகள் தேவை. ஒரு பேட்டரி விலை ரூ.6 ஆயிரம். 8 மணி நேரம் பேட்டரியை சார்ஜ் செய்தால் 25 கிமீ வேகத்தில் 5 பயணிகளுடன் 80 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். இதன் விலை ரூ.99 ஆயிரம். வழக்கமான ஆட்டோக்களை போன்று ரிவர்ஸ் கியர், பிரேக், இன்டிகேட்டர், நைட் லைட் என அனைத்து வசதிகளும் உள்ளது.
திருவெறும்பூரிலிருந்து வேங்கூர், கூத்தைப்பார் பகுதிகளுக்கு பயணி ஒருவருக்கு ரூ.10 வசூலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கத்திற்கு இயக்க வேண்டும். இவ்வாறு அமுதா கூறினார்.
