
இந்திய செல்போன் சந்தை கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் அனைத்தும் கடுமையான லாப இழப்பைச் சந்தித்து வருகிறது.
மேலும், செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் கொடுக்க வேண்டிய கடன் சுமார் 4.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. வருவாய் இழப்பு எல்லாவற்றையும் சேர்த்து சுமார் 8 லட்சம் கோடி ரூபாய் நிதிச்சுமையில் உள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த 2016 செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு செல்போன் நிறுவனங்கள் அனைத்துமே கடுமையான நெருக்கடிகளுக்கு உள்ளாகின. தங்களுடைய வாடிக்கையாளர்களை தக்க வைப்பதற்காக பல சலுகைகளை அறிவித்தன. இதன் காரணமாகவும் செல்போன் நிறுவனங்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இன்னொருபுறம், செல்போன் நெட்வொர்க் நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றுடன் ஒன்று இணைத்து வருகின்றன.
இந்த காரணங்களால் செல்போன் நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. சமீபத்தில் ஐடியா - வோடாபோன் இணைப்பின் போது ஆட்குறைப்பு செய்யப்பட்டது. அதேபோல், ரிலையன்ஸ் நிறுவனமும் ஆட்குறைப்பில் ஈடுபட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் 72% வருவாய் இழப்பைச் சந்தித்துள்ள நிலையில் அந்த நிறுவனமும் ஆட்குறைப்பு செய்துள்ளது.
இதன் காரணமாக, சுமார் 1.50 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைகளை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.