புதன், 11 அக்டோபர், 2017

காவல் நிலையத்தில் கதறி அழுத பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்! October 10, 2017

காவல் நிலையத்தில் கதறி அழுத பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்!


சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் அவர்களை விடுவிக்கக் கோரி காவல் நிலையத்தில் போலீசாரிடம் கதறி அழுத காட்சி வெளியாகியுள்ளது.

சென்னையில் மின்சார ரயிலில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பயணித்தது தொடர்பாக கல்லூரி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னையில் மாநில கல்லூரி மாணவர்களுக்கும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் பேருந்து மற்றும் ரயிலில் தலைவர் யார் என்பது தொடர்பாக அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு ஓடும் ரயிலில் ஒருவரை ஒருவர் அரிவாளால் வெட்டி கொண்டனர். இதில் 9 மாநில கல்லூரி மாணவர்கள் உட்பட 10 காயம் அடைந்தனர். 


இந்த வழக்கில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 10 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். எனினும், மின்சார ரயிலில் தலைவர் யார் என்பது தொடர்பாக இரு கல்லூரி மாணவர்களுக்கும் இடையே  மோதல் நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கடந்த இரு தினங்களுக்கு முன்பு நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் மாநில கல்லூரி மாணவர்கள் ஓடும் மின்சார ரயிலில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களை தரையில் தேய்த்தபடி சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து ஆவடி உதவி ஆணையர் நந்தகுமார் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். அதன் தொடர் நடவடிக்கையாக, ரயிலில் மக்களை அச்சுறுத்திய திருநின்றவூர் பகுதியை சேர்ந்த  மாணவர்கள் தண்டாயுதபாணி, பாலமுரளிகிருஷ்ணன், ஜகதீஸ்வரன் மற்றும் திருவள்ளூரை சேர்ந்த விக்னேஷ் ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். பின்னர் காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட மாணவர்களிடம் போலீசார் விசாரணையில் ஈடுபட்டபோது மாணவர்கள் தங்களை மன்னித்து விடுமாறு போலீசாரின் கால்களில் விழுந்து கதறி அழுதனர். ஆனால் மாணவர்கள் மீது ஆயுதங்கள் வைத்திருந்தது, பொது இடத்தில் ஆயுதங்களை காட்டி அச்சுறுத்தியது உள்ளிட்ட 5 வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். பின்னர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Posts: