
தமிழகம் முழுவதும் ஆங்காங்கே பெய்து வரும் கனமழையால் தரைப்பாலங்கள், தற்காலிக பாலங்கள் அடித்துச்செல்லப்படுகின்றன. இதனால், போக்குவரத்து கடும் நெருக்கடிக்கு உள்ளாகி பொதுமக்கள் அவதியுறுகின்றனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
துறையூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. பச்சமலை பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் கானப்பாடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஒட்டம்பட்டி- நரசிங்கபுரம் இடையே உள்ள பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழையில் கானப்பாடியில் 3 வீடுகள் சேதமடைந்துள்ளன. தற்போது பாலத்தை கடந்து செல்லும் கிராமங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 10வது முறையாக தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டு 30 அடி உயரத்திற்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள அஞ்செட்டியில் தொட்டல்லா காட்டாற்றிக்கு குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் மக்கள் பயன்பாட்டிற்காக தற்காலிக பாலம் ஒன்று அமைக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பாலம் பலமுறை அடித்து செல்லப்பட்டு பின்னர் அமைக்கப்பட்டது. இதனிடையே இன்று மீண்டும் வெள்ளம் ஏற்பட்டு பாலம் அடித்துசெல்லப்பட்டது. அப்போது 10 அடி உயரத்திற்கு மேல் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.
சேலத்தில் பெய்து வரும் கனமழையால் கோரிமேடு அருகே உள்ள தரைப்பாலம் மூழ்கியது. சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாலை நேரத்தில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் கடந்த வாரம் சேலம் மாநகர பகுதியில் உள்ள அம்மாப்பேட்டை குமரகிரி ஏரி நிரம்பியது. இதனை தொடர்ந்து நேற்று பெய்த கனமழை காரணமாக சேலம் கன்னங்குறிஞ்சி புதுஏரி நிரம்பியது.
மேலும் கோரிமேடு ஏ.டி.சி நகர் பகுதியில் மழைநீரால் தரைப்பாலம் மூழ்கி ஆறுபோல் தண்ணீர் ஓடுகிறது. இதனால் அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் பாலத்தை கடக்கமுடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.