
லஞ்சப் புகாரில் கோவை பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதி கைதான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனம் முதல் உதவி பேராசிரியர் நியமனம் வரை ஊழல் புகார்கள் கரைப்புரண்டு ஓடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமனம் செய்யும் தேர்வுக் குழுவில், அரசியல் தலையீடு காரணமாக அதில் இடம்பெறும் உறுப்பினர்கள் சிலர் இடைத்தரகர்களாக செயல்பட்டு பேரம் பேசும் அவல நிலை ஏற்படுகிறது. குறிப்பிட்ட பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் கல்லூரிகளுக்கு ஏற்ப துணைவேந்தர் பதவிக்கான நபர்களை கல்வியாளர்கள் தேர்வு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், அவ்வாறு துணைவேந்தராக பொறுப்பேற்ற பின், தாங்கள் செலவழித்த பணத்தை வசூல் செய்ய அவர்கள் முனைகின்றனர். அந்தந்த பல்கலைக்கழகங்களுக்கு கீழ் இயங்கும் கல்லூரிகளிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் வரையும், பேராசிரியர் பணியிடங்களுக்கு 30 லட்சம் ரூபாய் வரையும் லஞ்சமாக பெற துவங்குகின்றனர். அவ்வாறு நியமிக்கும் பேராசிரியர்கள், கல்லூரிகளை ஒழுங்குப்படுத்தும் சிண்டிகேட் அல்லது செனட் குழுக்களில் உறுப்பினர்கள் சேர்ந்து தாங்கள் அளித்த பணத்தை திரும்ப பெறுகின்றனர். லஞ்சப்புகாரில் சிக்கும் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மீது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களில் உயர் பதவியில் இருப்பவர்கள் பலர் லஞ்சப்புகாரில் சிக்கியுள்ளனர். டிசம்பர், 2016-ல் லஞ்சம் பெற்ற வழக்கில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ராதாகிருஷ்ணனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதேபோல் செப்டம்பர், 2017ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் பதவிக்காலத்தில் நியமிக்கப்பட்ட 5 மருத்துவ அதிகாரிகள் நியமனம் ரத்து செய்யப்பட்டது. நவம்பர், 2017-ல் பணிநியமன முறைகேடு புகாரில் பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சுவாமிநாதன், பதிவாளர் திருமாவளவன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஜனவரி, 2018-ல் நிதி முறைகேடு புகாரில் திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.