சனி, 17 பிப்ரவரி, 2018

சவூதி அரேபியாவில் நடைபெறும் கலாச்சாரத் திருவிழாவில் தமிழ் அரங்கு! February 16, 2018

சவூதி அரேபியாவில் நடைபெறும் ஜனதரியா கலாச்சார திருவிழாவின் ஒரு பகுதியாக தமிழ் அரங்கு அமைக்கப்பட்டு, தமிழ் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

சவூதி அரேபியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் ஜனதரியா கலாச்சாரத் திருவிழாவில், அதன் நேச நாடுகளை கௌரவித்து அந்நாடுகளின் அரங்குகள் அமைக்கப்பட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். 

இந்த ஆண்டின் ஜனதரியா திருவிழா கடந்த 7ஆம் தேதி சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்-ல் தொடங்கிய நிலையில், இந்திய மாநிலங்கள் சார்ந்த நிகழ்ச்சிகள் நேற்று தொடங்கின. 

இவ்விழாவில் சவூதி அரேபியாவின் பலம், ராணுவத் தளவாடங்கள் மற்றும் அதன் கலாச்சாரம் நாகரீகம், வரலாறு போன்ற விஷயங்கள் அடங்கிய அரங்குகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அதனை லட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்து மகிழ்வுறுவர்.
Image

இந்த ஆண்டு நடைபெறும் ஜனதரியா கலாச்சாரத் திருவிழாவில் இந்தியாவை கவுரவிக்கும் முகமாக, இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் இந்திய நிறுவனங்களின் அரங்குகள் அமைக்கப்பட்டு, கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி அன்று, சவூதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அவர்களும், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அவர்களும் ஜனதரியா கலாச்சாரத் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்கள்.

ஜனதரியா கலாச்சாரத் திருவிழாவில், தமிழ் அரங்கு அமைக்கப்பட்டு, ரியாத்தில் செயல்பட்டு வரும் தமிழ் அமைப்புகள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இவற்றில் பங்கேற்றவர்களுக்கு விழா மலரும், தமிழகத்தில் உள்ள சுற்றுலா வாய்ப்புகள் குறித்த கையேடுகள் உள்ளிட்டவையும் வழங்கப்பட்டன. 

சிறுவர்கள் நம் கலாச்சார உடையிலும் தமிழ்ப் பெருந்தலைவர்கள் போல் வேடமிட்டும், அரங்கிற்கு வருபவர்களை வரவேற்க உள்ளார்கள். ஜல்லிக்கட்டுக் காளை மற்றும் மாமல்லபுரம் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.