
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே சம்பக்காட்டில் பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் மலைப்பாதையை, கேரள வனத்துறையினர், திடீரென அடைத்துள்ளனர். இதனால், அங்கு வசிக்கும் மலைவாழ் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் தலிஞ்சி, மூங்கில் பள்ளம், உள்ளிட்ட ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்கு 2 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
வனப்பகுதியில் இருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்காக, கேரள வனத்துறைக்கு சொந்தமான பாதையை, மலை கிராம மக்கள் பயன்படுத்தி வந்தனர். பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும் இந்த பாதையை, கேரள வனத்துறையினர் திடீரென கம்பி வேலி அமைத்து, அடைத்துள்ளனர்.
இதனால், அங்குள்ள அரசு துவக்கப்பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள், பள்ளிக்கு வர முடியாமல் தவிக்கின்றனர். இதன் காரணமாக, பள்ளிக் குழந்தைகளின் கல்வி, கேள்விக்குறியாகியுள்ளது. மேலும், இந்த பகுதிக்கு வரும் ரேஷன் பொருட்களும் தடைபட்டுள்ளன. இதனால், மலைவாழ் மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
பாதை அடைக்கப்பட்டதால், அடர்ந்த வனப்பகுதியான கூட்டாறு பாதை வழியாக 20 கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றிவர வேண்டும் என்றும், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள அந்த பகுதியில் ஆபத்து அதிகம் உள்ளதாகவும் மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் இந்த நடவடிக்கையை கேரள வனத்துறையினர் மேற்கொண்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள மலைவாழ் மக்கள், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வுகாணுமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.