கடந்த சில நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ11,360 கோடி சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் செய்ததாக வைர வியாபாரி நீரவ் மோடியின் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவரது வீட்டில் அமலாக்கப் பிரிவு சோதனை நடத்தியது நினைவிருக்கலாம்.
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் அடங்குவதற்குள், மேலும் ஒரு தொழிலதிபர் வங்கியில் கடன் பெற்று வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.
ரோடோமேக் பெண்ஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனம் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, 5 பொதுத்துறை வங்கிகளில் 800 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
கான்பூரில் உள்ள கோத்தாரியின் தலைமை அலுவலகம் கடந்த ஒரு வாரமாக பூட்டப்பட்டிருப்பதாகவும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
விதிகளுக்கு புறம்பாக கோத்தாரிக்கு பொதுத்துறை வங்கிகளான அலகாபாத் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் வங்கி ஆகியவை கடன் அளித்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓராண்டுக்கு முன்னதாக அலகாபாத் வங்கியிடமிருந்து 352 கோடி ரூபாயும், யூனியன் வங்கியிடமிருந்து 485 கோடி ரூபாயும் பெற்றுள்ள கோத்தாரி, வாங்கிய கடனையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தவில்லை என்று தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக அலகாபாத் வங்கி அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்ட போது கோத்தாரியின் சொத்துக்களை விற்பனை செய்து அதன் மூலம் கொடுக்கப்பட்டுள்ள பணம் மீட்டெடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
நீரவ் மோடி விவகாரம் அடங்குவதற்குள், மேலும் ஒரு தொழில் அதிபர் ஒருவர் வங்கிகளை ஏமாற்றி பணம் பெற்று வெளிநாடு தப்பிச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.