புதன், 21 பிப்ரவரி, 2018

பள்ளி சேர்க்கைக்கு தடுப்பூசி சான்றிதழை கட்டாயப்படுத்திய கேரள அரசு! February 21, 2018

Image

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான  அரசு, அடுத்த கல்வியாண்டில் இருந்து பள்ளி சேர்க்கைக்கு தடுப்பூசி சான்றிதழை கட்டாயப்படுத்தியுள்ளது. 

புதிய மருத்துவக் கொள்கைக்கு கேரள சட்டமன்றம் அண்மையில் அனுமதியளித்துள்ளது, விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள இந்த புதிய மருத்துவக் கொள்கையின்படி இனி பள்ளி மாணவர் சேர்க்கைக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது, குழந்தைக்கு கொடுக்கப்பட்ட தடுப்பூசிகள் பற்றிய விவரங்களை, பள்ளி நிர்வாகத்திடம் காண்பிக்கவேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்தார்.

மேலும், சுகாதாரத்தில், கேரளா மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது என்றும் தடுப்பூசி இயக்கத்தை எதிர்த்து யாராவது தவறான செய்தியை பரப்பினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

விரைவில் அமலாகவுள்ள புதிய மருத்துவக் கொள்கையின்படி இனி மாநில அரசின் மருத்துவக் கல்லூரிகள் தன்னாட்சி பெற்றதாக மாற்றப்படும், ஆரம்ப சுகாதார நிலையங்களின் வேலை நேரம் மாலை 6 மணி வரை நீட்டிக்கப்படும், திருநங்கைகளுக்கு என பிரத்யேக மருத்துவமனைகள் அமைக்கப்படும். 

மேலும், பொதுமக்களுக்கு அவசர கால சிகிச்சை குறித்து பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது