செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

அதிகமான உபரித்தொகை: மக்களுக்கு பிரித்துக்கொடுக்க சிங்கப்பூர் அரசு திட்டம்! February 20, 2018

Image

கடந்த முப்பது வருடங்களை விட அதிக உபரித்தொகையை பெற்ற சிங்கப்பூர் அரசு, அதை 18 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கு பிரித்துக்கொடுக்க முடிவு செய்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து,  (Gross Domestic Product) 2.1 சதவிகிதம் உபரித்தொகை கிடைக்கவாய்ப்புள்ளது எனவும், அவற்றின் மதிப்பு, 9.61 பில்லியன் சிங்கப்பூர் டாலர் (ரூ.47,211 கோடி) எனவும் சிங்கப்பூர் நிதி அமைச்சர் கெங் ஸ்வீ கேட் (Heng Swee Keat)கடந்த திங்கட்கிழமை நடந்த பட்ஜெட் கூட்டத்தில் கூறினார்.

மேலும், 2018 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த கூடுதல் தொகை மக்களுக்கு பிரித்துத்தரப்படும் எனவும் சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கும் சிங்கப்பூர் மக்களுக்கு உபரித்தொகையை பிரித்துத்தருவது அரசின் கடமை எனவும் தெரிவித்தார்.

20 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள், அவர்களது வருமானத்திற்கு ஏற்றவாறு இந்த உபரித்தொகையை பெறுவார்கள் என சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.

28 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் (ரூ.13.76 லட்சம்) அல்லது அதை விடக் குறைவாக  ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர் (ரூ.14,700) , ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலருக்கு அதிகமாக ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 100 சிங்கப்பூர் டாலர் (ரூ.4,912),  28 ஆயிரம் சிங்கப்பூர் டாலரிலிருந்து ஒரு லட்சம் சிங்கப்பூர் டாலர் ஆண்டு வருமானம் பெறுபவர்களுக்கு 200 சிங்கப்பூர் டாலர் (ரூ.9,825) வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

சட்டபூர்வ குழு பங்களிப்பு (Statutory Board Contributions) மற்றும் முத்திரை வரி (Stamp Duty) சேகரிப்புகளிலிருந்து கிடைத்த ‘விதிவிலக்கான’வருவாய் காரணமாக அதிக உபரி வந்தது எனவும் நிதி அமைச்சர் தகவல் தெரிவித்தார்.