வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

5 தமிழர்கள் சடலமாக மிதந்த விவகாரம்: ஆந்திர போலீசாரின் ஆவணங்களில் முரண்பட்ட தகவல்கள் February 23, 2018

Image

ஆந்திராவில் ஐந்து தமிழர்கள் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு ஆவணங்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஐந்து தமிழர்கள் சடலமாக மீட்பு

ஆந்திரா மாநிலம் கடப்பாவில் கடந்த 18-ம் தேதி குட்டை ஒன்றில் ஐந்து தமிழர்கள் சடலமாக மீட்கப்பட்டனர். இதைடுத்து அவர்களின் உடமைகள் சோதனை செய்ததில் அவர்கள் தமிழகத்தின் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கல்வராயன்மலையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பிரேத பரிசோதனை செய்து அவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. 

27 பேர் கைது

இந்நிலையில் ஐந்து தமிழர்களின் உடல்கள் மீட்கப்பட்ட அடுத்த நாளில் செம்மரம் வெட்டியதாக நெல்லூர் மாவட்டத்தில் 27 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. 

நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்த ஆவணம்

இது தொடர்பாக ஆந்திர காவல்துறையினர் பதிவு செய்த குற்றப்பதிவு ஆவணம் நியூஸ் 7 தமிழுக்கு கிடைத்துள்ளது. இதில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. இந்த ஆவணத்தில் கைது செய்யப்பட்ட 27 பேர்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே குட்டையில் இருந்து மீட்கப்பட்ட கல்வராயன்மலை பகுதியை சேர்ந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

தப்பி வந்தவர்கள் பேட்டி

ஆனால் 18-ம் தேதி  கல்வராயன்மலையில் இருந்து ஆந்திரா சென்ற குழுவினர் ஒருவர் நமது நியூஸ்7 தமிழுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தாங்கள் 60-க்கும் மேற்பட்டவர்கள் ஆந்திரா சென்றதாவும் வனத்துறையினர் தங்களை துரத்தியதாகவும் அதில் இருந்து தான் தப்பியதாகவும் கூறியுள்ளார். எனவே 60-க்கும் மேற்பட்ட தமிழர்கள் சென்ற நிலையில் 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 

வலுக்கும் சந்தேகங்கள்

மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பபட்டுள்ளதாக காட்டப்பட்டுள்ளனர். ஆகவே எஞ்சியவர்களின் நிலைமை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது. கடப்பாவில் இருந்த தமிழர்கள் நெல்லூரில் கைது செய்யப்பட்டதாகக் காட்டப்பட காரணம் என்ன? தமிழர்கள் உடல் மீட்கப்பட்ட சம்பவத்திற்கு தொடர்பில்லாமல் இருக்க வேறு மாவட்டத்திற்கு அவர்கள் கொண்டு செல்லப்பட்டு கைது செய்யப்பட்டனரா என்றும் சந்தேகிக்கப்படுகிறது?

 முரண்பட்ட தகவல்கள்

மேலும் ஐந்து தமிழர்களும் குட்டையில் மூழ்கி உயிரழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த குட்டை 4 முதல் ஐந்தரை அடி ஆழம் தான் என குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே அவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்திருப்பார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இந்த பல்வேறு கேள்விகளை இரு மாநிலங்களைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும், சமூக ஆர்வலர்களும் முன் வைத்துள்ளனர்.