சரியான தகவல்கள் அளிக்கப்படாததால், ஜிஎஸ்டி-க்காக கூடுதலாக செலுத்தப்பட்ட 10,000 கோடி ரூபாயை திருப்பி அளிக்க முடியா நிலை உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி விகிதம் திருத்தப்பட்டதை அடுத்து, கூடுதல் வரி செலுத்தியவர்களுக்கு அவற்றைத் திருப்பி அளிக்க அரசு முன்வந்தது. இது தொடர்பாக அரசுக்கு உரிய ஆவணங்களை அளித்து, கூடுதல் வரிக் கட்டணத்தை பெற்றுக் கொள்ளுமாறு ஏற்றுமதி நிறுவனங்களை அரசு கேட்டுக்கொண்டது.
எனினும், ஏற்றுமதி நிறுவனங்கள் அளித்த ஆவணங்களில், தவறான தகவல்கள் இருப்பதால், அவற்றை திருத்தி மீண்டும் சமர்ப்பிக்குமாறு அரசு தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசுக்கு சமர்ப்பிக்கும் ஆவணங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே, கூடுதல் கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
முறையான ஆவணங்கள் அளிக்கப்படாததால், திருப்பி அளிக்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையில் 70 சதவீதம் அப்படியே உள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு 10,000 கோடி என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.