ஆந்திர மாநிலம் கடப்பா அருகே ஏரியில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட 5 தமிழர்களின் உடற்கூறு ஆய்வு கடப்பா அரசு மருத்துவமனையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடப்பா மாவட்டத்துக்கு உட்பட்ட ஒண்டிபெட்டா வனப்பகுதியில் உள்ள ஏரியில் சடலங்கள் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அழுகிய நிலையில் கிடந்த 5 சடலங்களை மீட்ட போலீசார் கடப்பா அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
நீரில் மிதந்த அவர்களின் உடமைகளை சோதனை செய்த போலீசார் ஐந்து பேரும் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிந்தனர். இந்த நிலையில், கடப்பா அரசு மருத்துவமனையில் 5 பேரின் உடற்கூறு ஆய்வு தொடங்கி நடைபெற்றுவருகிறது. உடற்கூறு ஆய்வை தொடர்ந்து உடல்களை ஒப்படைக்க, அவர்களது உறவினர்களின் வருகைக்காக போலீசார் காத்திருக்கின்றனர்.
இதனிடையே, போலீசார் கைப்பற்றிய தகவல்களைக் கொண்டு நியூஸ் 7 தமிழ் மேற்கொண்ட முயற்சியால் இறந்த 5 பேரின் உறவினர்களும் கண்டறியப்பட்டுள்ளனர். உயிரிழந்த 5 பேரும் சேலம் மாவட்டம் கல்வராயன் மலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
5 பேரில் முருகேசன் என்பவர் அடியனூரையும், கருப்பண்ணன் என்பவர் ஆவாரை பகுதியையும், முருகேசன், ஜெயராஜ், சின்னப்பையன் ஆகிய மூவர் கெராங்காடு பகுதியையும் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
தோட்ட வேலைக்காக 20 நாட்கள் முன்பு இவர்களை கேரளா, மைசூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்துச் சென்றதாக உறவினர்கள் கூறுகின்றனர். அடியனூர் முருகேசன் என்பவரது மனைவி உண்ணாமலை, நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில், தமது கணவரை தோட்ட வேலைக்கு கேரளா செல்வதாக கூறிச் சென்றதாகவும், நியூஸ் 7 தமிழ் செய்தியை பார்த்தே அவர் இறந்ததை அறிந்துகொண்டதாகவும் கூறியுள்ளார்.
இதனிடையே, 5 தமிழர்களின் மர்ம மரணத்திற்கு நீதி கேட்டு ஆந்திர மாநிலம் கடப்பாவில் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.