சனி, 24 பிப்ரவரி, 2018

திருவாரூர் அருகே ஓ.என்.ஜி.சி. எண்ணெய் குழாயில் உடைப்பு: வயலில் எண்ணெய் தேங்குவதால் விளைநிலம் பாதிப்பு


திருவாரூர்: திருவாரூர் அருகே கீழ எருகாட்டூர் என்ற இடத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தால் பதிக்கப்பட்ட எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் விவசாய நிலம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட கமலாபுரம் அருகே எருகாட்டூர் என்ற கிராமத்தில் பல விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களில் சம்பா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது அறுவடை பணிகள் நடந்து முடிந்த நிலையில் ஒருசில விவசாயிகள் அறுவடை பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.

தனசேகரன் என்ற விவசாயிக்கு சொந்தமான 5 ஏக்கர் விவசாய நிலம் எருகாட்டூர்-வடகுடி சாலையில் உள்ளது. குறிப்பபாக விவசாயி தனசேகரினின் விவசாய நிலத்தின் அடியில் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் கச்சா எண்ணெய் எடுத்து செல்லும் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் திடீரென்று உடைப்பு ஏற்பட்டதால் குழாயில் இருந்து எண்ணெய் கொப்பளித்து வெளியேறி வருகிறது. இதன் காரணமாக, அந்த 5 ஏக்கர் நிலத்தில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் கச்சா எண்ணெய் படர்ந்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது. அறுவடை செய்துவிட்ட காரணத்தால் சம்பா பயிர்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை என தனசேகரன் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் இனி வரும் காவலங்களில் அந்நிலத்தில் விவசாயம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தகவலறிந்து வந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன அதிகாரிகள், காவல்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் உடைப்பு ஏற்பட்ட இடத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். ஏற்கனவே எருகாட்டூர் மற்றும் கமலாபுரம் பகுதியில் ஓ.என்.ஜி.சி.யின் கச்சா எண்ணெய் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு பலநூறு ஏக்கர் விவசாய நிலங்களில் இன்னும் விவசாயம் செய்ய முடியாத சூழல் நிலவி வருகிறது.

விவசாயிகளின் கோரிக்கை..

டெல்டா மாவட்டங்களில் இருந்து ஓஎன்ஜிசி நிறுவனம் வெளியேற வலியுறுத்தி பொதுமக்கள், விவசாயகள் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனமானது காவல்துறை அனுமதியுடன் தொடர்ந்து விளை நிலங்களில் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. விளை நிலங்களுக்கு நடுவிலோ, ஆற்றுக்கு நடுவிலோ எண்ணெய் குழாய் அமைக்கக்கூடாது என்ற கோரிக்கையை விவசாயிகள் முன்வைத்துள்ளனர்.

விவசாய நிலங்களில் குழாய்களை பதிப்பதால் தொடர்ந்து பல்வேறு விவசாய நிலங்கள் முழுவதுமாக பாதிக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே ஓ.என்.ஜி.சி நிறுவனம் குழாய் பதிக்கும் பணிகளை உடனே நிறுத்த வேண்டும், இவர்களுக்கு காவல்துறையினர் ஒருபோதும் அனுமதி வழங்கக்கூடாது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.