நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இல்லத்திலிருந்து இன்று காலை துவங்கினார்.
இன்று மாலை தனது அரசியல் கட்சியின் பெயர் மற்றும் கொடியை அறிமுகப்படுத்த உள்ள கமல்ஹாசன் அதற்கு முன்னதாக, இன்று காலை அவருடைய அரசியல் பயணத்தை துவங்கினார். அதன் முதல் கட்டமாக இன்று காலை அப்துல் கலாம் இல்லத்திற்குச் சென்ற கமல், கலாமின் மூத்த சகோதரர் முத்து மீரான் மரைக்காயரை சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் அவரின் குடும்பத்தாருடன் உரையாடிய கமல், அவர்களுடன் சிற்றுண்டி சாப்பிட்டார். பின்னர் வெளியே வந்த கமலை ரசிகர்கள் திரண்டு வரவேற்றனர்.
இதனிடையே அப்துல்கலாம் படித்த பள்ளியை பார்வையிட கமலுக்கு பள்ளிக் கல்விதுறை அனுமதி மறுத்திருந்தது. பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாட கமலை அனுமதிக்க கூடாது என இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கலாம் படித்த பள்ளிக்குச் சென்று பார்வையிடும் திட்டத்தை நடிகர் கமல் கைவிட்டார். எனினும், அந்த சாலையை கடந்து செல்லும் போது, காரில் இருந்த படியே அப்துல் கலாம் பயின்ற பள்ளியை பார்வையிட்டார்.