வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

கேரள அரசைக் கண்டித்து மலைவாழ் மக்கள் போராட்டம்! February 23, 2018

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மலைவாழ் மக்கள் பயன்படுத்திவந்த பாதையை மறித்த கேரள அரசைக் கண்டித்து தமிழக - கேரள எல்லையில் போராட்டம் நடைபெற்றது. 

தளிஞ்சிவயல், மஞ்சம்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்திவந்த சம்பக்காடு பாதையை கேரள வனத்துறையினர் கம்பிவேலி அமைத்து அடைத்தனர். 

இதனைக் கண்டித்து தமிழர் பண்பாட்டு பேரவை சார்பில் உடுமலையில் தமிழக-கேரள எல்லையில் நடைபெற்ற போராட்டத்தில் திமுக எம்.எல்.ஏ. இரா.ஜெயராமகிருஷ்ணன், மலைவாழ் மக்கள் உள்பட பலர் பங்கேற்றனர். 

சம்பக்காடு பகுதி வழியாக அமராவதி அணைக்கு நீர்வரத்து உள்ளதால் அதனைத் தடுக்கும்வகையில், ஏதேனும் திட்டத்தை நிறைவேற்றும் முயற்சியில் கேரளா இந்த பாதையை அடைத்துள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். 

ஏற்கனவே அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் வகையில் பாம்பாற்றின் குறுக்கே கேரளா அணை கட்ட முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.