வியாழன், 22 பிப்ரவரி, 2018

ஏர்செல் நிறுவனத்தின் சேவை முடங்கியதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் February 22, 2018

Image

தமிழகத்தின் பல நகரங்களில் ஏர்செல் நிறுவனத்தின் சேவை முடங்கியதால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர்கள் ஏர்செல் நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சக தொலைத்தொடர்பு நிறுவனங்களின் போட்டியை சமாளிக்க முடியாததால் ஏர்செல் நிறுவனம் இந்த மாத இறுதியோடு சேவையை நிறுத்திக்கொள்ளப்போவதாக சமூகவலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதனிடையே, திருப்பூரில் திடீரென ஏர்செல் சேவை துண்டிக்கப்பட்டதால் அதன் வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் திருப்பூர் குமரன் சாலையில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏர்செல் ஊழியர்களிடம் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவர்களிடம் புகார்களை வாங்கிக்கொண்டு கூட்டத்தை கலைத்தனர்.

இதே போல, கரூரிலும் ஏர்செல் சேவை துண்டிக்கப்பட்டதை கண்டித்து ஏர்செல் அலுவலகத்தை முற்றுகையிட்டு வாடிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், தங்களது தொழில் உள்ளிட்ட அன்றாட வேலைகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி கரூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஏர்செல் அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர். 

ஏர்செல் சேவை முழுமையாக முடங்கியதை தொடந்து கோவை அவினாசி சாலையில் உள்ள ஏர்செல் தலைமை அலுவலகத்தை வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டனர். சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் ஓரே நேரத்தில் ஏர்செல் அலுவலகத்தை  முற்றுகையிட்டதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். ஏர்செல் நிறுவனம் முன்பாக ஏர்டெல், ஜியோ போன்ற போட்டி நிறுவனங்களின் தற்காலிக விற்பனை மையங்கள் தொடங்கப்பட்டு புதிய சிம்கார்டுகள் விற்பனை நடைபெற்றது. 

இதனிடையே, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் ஒத்துழைப்பு தரும் பட்சத்தில், இன்னும் ஓரிரு நாட்களில் இது சரிசெய்யப்படும் எனவும், இதுவரை நடந்த பாதிப்புக்கு மனதார மன்னிப்பு கோருவதாகவும் ஏர்செல் நிறுவனம் கூறியுள்ளது.