செம்மரம் வெட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்ட 3 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் ஆந்திர சிறைகளில் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் தமிழர்கள் பலர் செம்மரம் வெட்டி கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் எந்த வித விசாரணையும் இன்றி, ஜாமினில் வெளிவர முடியாத நிலையில் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
3 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழர்களை, வழக்குகளுக்கு மேல் வழக்குகளை போட்டு சிறைகளிலேயே ஆந்திர அரசு அடைத்து வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதிகபட்சமாக ஒரு நபர் மீது 75 வழக்குகள் வரை போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு வழக்கில் ஜாமின் கிடைக்கும் போது அவர் மீது மேலும் வழக்குகளை போட்டு சிறையிலேயே அடைப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஒரு வழக்கிற்கு ஜாமின் பெற குறைந்தபட்சம் 30,000 ரூபாய் வரை செலவாகும் என்பதால், அத்தனை வழக்குகளிலும் ஜாமின் பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள தமிழர்கள் அச்சத்துடனேயே சிறைகளில் ருப்பதாக மனித உரிமை ஆர்வலர்களும் வழக்கறிஞர்களும் தெரிவிக்கின்றனர். சிறைகளில் இருக்கும் தமிழர்களை அங்கிருக்கும் காவலர்கள் மிக கொடூரமாக சித்ரவதை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தலைகீழாக கட்டி தொங்கவிட்டு அடிப்பது, நகங்களை பிடுங்குவது, உடலில் மின்சாரத்தை பாய்ச்சுவது போன்ற சித்ரவதைகளை அனுபவித்து வருவதாகவும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு சித்ரவதைக்கு உள்ளாகி உள்ளவர்கள் பெரும்பாலும், சேலம், திருவண்ணாமலை,
வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.