வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

அடுத்த பெரிய சர்ச்சையில் சிக்கிய பஞ்சாப் நேஷனல் வங்கி! February 23, 2018

Image

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்துள்ள 1,000 வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டுகளின் CVV உள்ளிட்ட அனைத்து ரகசிய தகவல்களும் இணையத்தில் வெளியானதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. 

ஹாங்காங்கில் இருந்து வெளிவரும் ஏசியா டைம்ஸ் இதழ் இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்கள்,  காலாவதி நாள் (Expiry Date), தனித்த அடையாள எண்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இணையத்தில் கிடைப்பதாக கூறியுள்ளது.

ரகசிய தகவல்கள் இரு வகைகளில் இணையத்தில் கிடைப்பதாகவும், முதலாவதாக CVV எண்ணுடனும், இரண்டாவதாக CVV எண் இல்லாமலும் கிடைப்பதாக ஏசியா டைம்ஸ் தெரிவித்துள்ளது. இத்தகவல்கள் கடந்த 3 மாதங்களாக இணையத்தில் விற்பனைக்கு கிடைக்கிறது என்ற அதிர்ச்சி தகவலையும் அச்செய்தி நிறுவனம் அம்பலப்படுத்தியுள்ளது.

கூகுள் போன்ற தேடுபொறிகளில் இத்தகைய தகவல்கள் அடங்கிய இணைய தளங்களை காண முடியாது என்றும், dark/deep web எனப்படும் ரகசியமாக இயங்கக் கூடிய இணையத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதை சிங்கப்பூரைச் சேர்ந்த CloudSek Information Security நிறுவனம் கண்டறிந்து அந்நாட்டு அரசின் உதவியுடன் பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகளை தொடர்புக் கொள்ள முயற்சித்ததாகவும், ஆனால் அவர்களை தொடர்புக் கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி விர்வானி, வங்கியின் முக்கிய தகவல்கள் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக அரசுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10,000 கிரெடிட் கார்டுகளின் ரகசியத் தகவல்கள் வெளியாகியுள்ளதாக கூறியுள்ள ஏசியா டைம்ஸ், $4.90 (சுமார் ரூ.320) செலுத்தி ஒரு கிரெடிட்/டெபிட் கார்டின் தகவலை சட்டவிரோதமாக பெற்றுக் கொள்ளலாம் என்ற அதிர்ச்சிகர தகவலையும் வெளிக்கொண்டு வந்துள்ளது.