செவ்வாய், 20 பிப்ரவரி, 2018

​கனடா பிரதமருக்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லையா? சர்ச்சையை கிளப்பும் ஊடகங்கள்! February 20, 2018

Image

ஒரு வாரகால அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள கனடா பிரதமர் ஜெஸ்டீன் ட்ரூடோவுக்கு இந்திய அரசு உரிய மரியாதை அளிக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் விமர்சித்து செய்தி வெளியிட்டுள்ளன.

இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள இங்கிலாந்தின் எக்ஸ்பிரஸ் செய்தி நிறுவனம், கடந்த சனிக்கிழமை இந்தியா வந்திறங்கிய ஜெஸ்டீனை பிரதமர் மோடிக்கு பதில் ஜூனியரான மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் வரவேற்றதை சுட்டிக்காட்டியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை தாஜ்மகாலை சுற்றிப்பார்க்க ஜெஸ்டீன் குடும்பத்துடன் சென்றபோது அவரை வரவேற்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மட்டுமல்லாமல், மாநில அமைச்சர்கள் கூட செல்லாததை சுட்டிக்காட்டும் வகையில், மாவட்ட அளவிலான அதிகாரிகள் அவரை வரவேற்றதாக எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது. 

டொரோன்டோவில் கடந்த ஆண்டு மே மாதம் சீக்கிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ஜெஸ்டீன் ட்ரூடோ பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலேயே இந்திய அரசு இவ்வாறு நடந்துக் கொள்வதாக தூதரக தகவல்கள் தெரிவிப்பதாகவும் அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

வெளிநாட்டு தலைவர்களை நேரில் சென்று அன்பாக கட்டியணைத்து வரவேற்பதை வழக்கமாக கொண்ட பிரதமர் மோடி, கனடா பிரதமரை வரவேற்காததை பிபிசி நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், திங்கட்கிழமை பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திற்கு ஜெஸ்டீன் சென்றபோது மோடி அங்கு இல்லாததை பிபிசி சுட்டிக்காட்டியுள்ளது.

காலீஸ்தான் தனிநாடு கோரிக்கையுடன் போராடி வரும் சீக்கிய அமைப்புகளுடன் ஜெஸ்டீன் ட்ரூடோ இணைந்து இயங்குவதாலேயே இந்திய அரசு இத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவதாக பிபிசியும் குறிப்பிட்டுள்ளது. ஜெஸ்டீனின் லிபரல் கட்சி கனடாவில் வாழும் சீக்கியர்களின் ஓட்டுவங்கியை முக்கியமாக நம்பி இருப்பதாகவும், ஜெஸ்டீன் அமைச்சரவையில் நான்கு பேர் சீக்கிய-கனடர்கள் இடம்பெற்றுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளது. 

இது தொடர்பாக இந்திய தூதரகத்தின் முன்னாள் அதிகாரி விஷ்ணு பிரகாஷை பேட்டி கண்டுள்ள பிபிசி, கனட பிரதமர் இந்தியாவில் புறக்கணிக்கப்படவில்லை என்றும், வெளிநாட்டு தலைவர்களை வரவேற்கையில் கடைபிடிக்கப்படவேண்டிய வழிகாட்டுதல்கள் எதுவும் மீறப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளதையும் பதிவு செய்துள்ளது. பிரதமர் மோடியை 23ம் தேதி கனட பிரதமர் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டியுள்ள விஷ்ணு பிரகாஷ், பிரதமர் மோடி பல தலைவர்களை நேரில் சென்று வரவேற்றுள்ள போதிலும், எல்லா தலைவர்களையும் அவ்வாறு வரவேற்றுக் கொண்டிருக்க முடியாது என்றும் விளக்கம் அளித்துள்ளார்.

இதனிடையே பஞ்சாப் முதலமைச்சர் அமரேந்திர சிங் ட்விட்டரில் பதிவொன்றை இட்டுள்ளார். அதில், கனடா பிரதமருடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளதாகவும், இந்த சந்திப்பு இந்திய-கனடா உறவை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
Look forward to meeting Canadian Prime Minister @JustinTrudeau in Amritsar on Wednesday. I’m hopeful that this meeting will help strengthen the close Indo-Canadian business ties as well as the deep-rooted people-to-people relations between our two countries.

கனடாவில் சுமார் 46.8 லட்சம் சீக்கியர்கள் வாழுகின்றனர். இது அந்நாட்டு மக்கள் தொகையில் 1.4 சதவீதம். இது சிறிய அளவாக தோன்றினாலும், அந்நாட்டு அரசியலில் பெரிதும் தாக்கம் செலுத்தக்கூடியது என்று தெரிவிக்கிறது இங்கிலாந்தின் எக்ஸ்பிரஸ் செய்தி இதழ்.