திங்கள், 19 பிப்ரவரி, 2018

தமிழகத்தை உலுக்கிய சிறுமி ஹாசினி கொலை வழக்கு : தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு


சென்னை: சென்னை போரூர் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளார். சிறுமி கடத்தலுக்கு 46 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் கொலை குற்றத்திற்காக மரண தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. 30 சாட்சியங்கள், 45 ஆவணங்கள், 19 சான்றுப் பொருட்கள் அடிப்படையில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தூக்கு தண்டனை விதித்த நீதிபதிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

முதலில் தஷ்வந்த் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை விவரம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மகிளா நீதிமன்றம் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதித்துள்ளது. அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தஷ்வந்த் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் குற்றத்தை மறைத்தல், கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தஷ்வந்த் மீது நிரூபணமாகியுள்ளது என செங்கல்பட்டு மகளில் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் கூறியுள்ளார். சி.ஆர்.பி.சி. 201, 202, 354, 363, 366 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என நீதிபதி வேல்முருகன் தெரிவித்துள்ளார். இதனிடையில் குறைந்தபட்ச தண்டனை வழங்குமாறு நீதிபதியிடம் தஷ்வந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னதாக சென்னை போரூர் பகுதியை சேர்ந்த சிறுமி ஹாசினி கடந்தாண்டு பிப்ரவரி 6-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். தனிப்படை அமைத்த தமிழக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தது. பின் மும்பையில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில் போலீசாரை தாக்கி தஷ்வந்த் தப்பினார். பின் 24 மணி நேரத்தில் மும்பை போலீஸ் உதவியுடன் சென்னை போலீசார் அவரை கைது செய்தனர்.

பின் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் 35 சாட்சியங்களின் விசாரணை முடிவடைந்தது. இந்நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பில் அனைத்து குற்றச்சாட்டுகளிலும் தஷ்வந்த் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது இதனால் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். பிறகு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி ஹாசினி கொலை வழக்கில் தஷ்வந்துக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமி கடத்தலுக்கு 37 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் கொலை குற்றத்திற்காக மரண தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.