செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

​கணினி இல்லாததால் Microsoft Word-ஐ கரும்பலகையில் வரைந்து பாடம் நடத்திய ஆசிரியர்! February 27, 2018

Image

பள்ளியில் கணினி இல்லாததால், microsoft word-இன் வரைபடத்தை, கரும்பலகையில் வரைந்து பாடம் கற்பித்த ஆசிரியர்.

தென் ஆப்பிரிக்காவின் கானா பகுதியில் உள்ள பள்ளியில், கணினி வசதி இல்லாததால், microsoft word இன் வரைபடத்தை, கரும்பலகையில் வரைந்து பாடம் நடத்திய ஆசிரியரின் செயல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

க்வாட்வோ ஹாட்டிஷ் என்பவர், கானா பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில், கணினி மற்றும் ப்ரொஜெக்டர் இல்லாத காரணத்தால், மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளார். 

எனினும், அவரிடம் படிக்கும் மாணவர்களுக்கு புரியும் வகையில் பாடம் நடத்த வேண்டும் என்பதற்காக, microsoft word-ன் வரைபடத்தை முழுவதுமாக கரும்பலகையில் வரைந்து, அதனைப்பற்றி விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், அவர் வரைந்து பாடம் நடத்துவது போன்ற புகைப்படங்களை, அவரது ஃபேஸ்புக் பக்கத்திலும் பதிவு செய்துள்ளார். அதில் “நான் என் மாணவர்களை மிகவும் நேசிக்கிறேன், அதனால் அவர்களுக்கு எப்படி சொல்லித்தந்தால் புரியவைக்க முடியும் என்பதை அறிவேன்” என்று பதிவிட்டுள்ளார்.

பதிவு செய்த சிலமணி நேரங்களிலேயே, அவரது புகைப்படங்கள் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாக மாறியுள்ளது.

2018-ல் கூட, பள்ளிகளில் கணினி இல்லாதது ஆச்சரியத்தை தருகிறது என்று விமர்சித்து வரும் பொதுமக்கள், அந்த பள்ளிக்கு கணினி மற்றும் மடிக்கணினி வழங்க முன்வந்துள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில், பல பள்ளிகள் இதுபோன்று உள்ளதாகவும், அவைகளுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்யப்போவதாகவும், ஆசிரியர் க்வாட்வோ ஹாட்டிஷ் தெரிவித்தார்.