கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முகாந்திரம் இருந்தால் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டாள் குறித்த வைரமுத்துவின் கருத்தை கண்டித்து, ஜனவரி 26ஆம் தேதி திருச்செங்கோட்டில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், தங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என கூறினார்.
இதையடுத்து, இரு தரப்பினரிடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், ஜீயர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, புகாரில் முகாந்திரம் இருந்தால் ஜீயர் மீது வழக்கு பதிவு செய்யலாம் என உத்தரவிட்டார்.
இதுகுறித்து, நியூஸ் 7 தமிழுக்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த ஜீயர், தமது அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.