இந்தியாவில் செயல்படும் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் தொலைத்தொடர்புத் துறை கடந்த ஜனவரி 8ஆம் தேதி ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதில் இனி புதிதாக அளிக்கப்படும் அனைத்து மொபைல் எண்களும் (M2M) 10 இலக்கங்களுக்கு பதிலாக 13 இலக்கமாக மாற்றப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த முன்னெடுப்பை தொலைதொடர்புத் துறை எடுத்துள்ளது. இதன் காரணமாக இனி நாம் பயன்படுத்தும் 10 இலக்க மொபைல் எண்கள் இனி 13 இலக்க எண்ணாக மாறுமா என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து விரிவாக காணலாம்:
நாம் தற்போது பயன்படுத்தி வரும் சிம்களில் M2M (machine2machine) எண்ணானது 10 இலக்கம் கொண்டதாக இருக்கிறது. பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்கும் பொருட்டு 13 இலக்க M2M எண்ணை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அளிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதிய சிம்கள் இனி 13 இலக்கங்கள் (M2M) கொண்டதாக இருக்கும். தற்போது பயண்படுத்தி வரும் சிம்களும் வரும் அக்டோபர்1ஆம் தேதி முதல் 13 இலக்கங்கள் கொண்டதாக மாற்றப்படும். இதற்கான இறுதி காலக்கெடுவாக டிசம்பர் 31ஆம் தேதியை தொலைத்தொடர்பு அமைச்சகம் நிர்ணயித்துள்ளது.
பொதுமக்கள் அச்சம்:
10 இலக்கங்கள் கொண்ட நம்முடைய மொபைல் எண் இனி 13 இலக்கம் கொண்டதாக மாற உள்ளதாக பொதுமக்கள் தவறாக நினைத்துவிடக் கூடும்.
M2M அதாவது machine2machine எண் மட்டுமே 13 இலக்கம் கொண்டதாக மாற்றப்பட உள்ளதால் நாம் பயன்படுத்தி வரும் சிம்கள் 10 இலக்கம் கொண்டதாகவே நீடிக்கும். இது மெஷின் - மெஷின் தொடர்புக்கு மட்டுமே ஆனது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.