ஞாயிறு, 18 பிப்ரவரி, 2018

திரிபுரா சட்டமன்ற தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு! February 18, 2018

Image

திரிபுரா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

திரிபுரா சட்டப்பேரவையில் 60 தொகுதிகளில் 59 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது. 1993ம் ஆண்டு முதல், அம்மாநிலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. 

இந்நிலையில், 5வது முறையாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை பிடிக்கும் நோக்கில், முதலமைச்சர் மாணிக் சர்க்கார் களம் இறங்கியுள்ளார். மொத்தம் 307 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர். 

காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறும்.

மாநிலம் முழுவதும் 3,214 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்தியா - வங்கதேசம் சர்வதேச எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினரும் ரோந்துப்பணியில் ஈடுபட்டுள்ளனர். 

இத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 57 சீட்களில் போட்டியிடுகிறது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், ஃபார்வார்ட் பிளாக் கட்சி ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன.

இதே போல மலைவாழ் சமூகத்தினரின் திரிபுரா மக்கள் முன்னணியுடன் (IPFT) கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கும் பாஜக, 51 இடங்களில் போட்டியிடுகின்றது.

இந்த முறை தனியாக களமிறங்கும் காங்கிரஸ் 59 தொகுதிகளிலும் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் குறைந்த சொத்து மதிப்பு கொண்ட முதல்வராக மாணிக் சர்கார் விளங்குவது, அவர் தாக்கல் செய்த வேட்பு மனு மூலம் தெரியவந்தது. கடந்த 20 ஆண்டுகாலமாக அம்மாநில முதல்வராக அவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.