கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோ ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலை இன்று பார்வையிட்டார்.
கனடாவின் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடியோ ஒரு வார கால பயணமாக இந்தியாவிற்கு தனது குடும்பத்தினருடன் நேற்று வந்து சேர்ந்தார்.
இன்று உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை, தனது மனைவி SOPHIE GREGOIRE TRUDEAU, மகள் ELLA GRACE, மகன்கள் HADRIEN AND XAVIER ஆகியோருடன் ஜஸ்டின் ட்ரூடியோ பார்வையிட்டார். அங்கு குடும்பத்தினருடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடியோவின் வருகையை அடுத்து ஆக்ராவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. 7 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜஸ்டின் ட்ரூடியோ, குஜராத்தின் அகமதாபாத், மகாராஷ்ட்ராவின் மும்பை, பஞ்சாபின் அம்ரிட்சர் பொற்கோவில், சபர்மதி ஆஷ்ரமம்ச் ஆகிய இடங்களுக்கும் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதனையடுத்து வரும் 23ம் தேதி டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து ஜஸ்டின் ட்ரூடியோ பேச்சுவார்த்தை நடத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, அணுமின் நிலையங்கள், விண்வெளி ஆராய்ச்சி, பாதுகாப்பு, எரிசக்தி, கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் 2வது இடத்தில் இந்தியர்கள் உள்ளனர். சுமார் 14 லட்சம் இந்தியர்கள் கனடாவில் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.