சனி, 24 பிப்ரவரி, 2018

சிறுவாணி ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை அமைக்கிறது கேரள அரசு : கோவை, ஈரோட்டில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்


சென்னை : சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு 5 இடங்களில் தடுப்பணைகளை அமைத்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபத்து உள்ளது. சிறுவாணி ஆற்றின் தடுப்பணை கட்டும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக வனப்பகுதியில் உற்பத்தி ஆகக்கூடிய பவானி மற்றும் சிறுவாணி ஆறுகள் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி வழியாக சுமார் 20கிமீ தூரம் பயணித்து மீண்டும் தமிழகத்தை வந்து அடைகிறது.இந்த இரண்டு ஆறுகளின் நீர் ஆதாயத்தை நம்பி சிறுவாணி மற்றும் பில்லுரு அணைகள் கட்டுப்பட்டுள்ளது. இந்த அணைகளில் இருந்து கோவை மாவட்டத்தில் இருக்கக்கூடிய பல லட்சம் மக்களுக்கு தேவையான குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை கேரள நீர் பாசன துறை அதிகாரிகள் எந்த விதமான முன் அறிவிப்பும் செய்யாமல் சிறுவாணி அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அப்படி வெளியேற்றப்பட்ட தண்ணீரானது எக்காரணத்தை கொண்டும் மீண்டும் தமிழகத்திற்கு வந்துவிட கூடாது என்பதற்காக சிறுவாணி ஆற்றில் 5 இடங்களில் சுமார் 5 அடி உயரத்திற்கு மணல் மூட்டைகளை அடுக்கி தடுப்பணை கட்டும் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் தற்போது செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு இந்த சிறுவாணி ஆற்றில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரை உடனடியாக தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் தடுப்பணைகளை கட்டும் பணிகளையும் தடுத்த நிறுத்த வேண்டும் என்றும் பொது மக்களும் விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.