சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு சொந்தமான இடத்தை மீட்டுத்தரக்கோரி மாணவர்களுடன் சேர்ந்து பெற்றோர்களும் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கெங்கவல்லி அருகே உள்ள கணேசபுரத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்காக கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த 5பேர் மூன்று ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்கியுள்ளனர். ஆனால் பள்ளிக்கு அருகாமையில் உள்ள 50 சென்ட் நிலத்தை முருகேசன் என்பவர் ஆக்கிரமித்து பட்டா போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனவே நிலத்தை மீட்டுத்தரக்கோரியும், பட்டா போடுவதற்கு உடந்தையாக இருந்த வருவாய் துறையினரை கண்டித்தும் அக்கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பொதுமக்களின் போராட்டம் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.