சென்னை ஐஐடியில் சமஸ்கிருத பாடல் பாடப்பட்ட சம்பவம் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.
கோவை சித்தாபுதூரில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, தமிழர்களின் தன்மானத்திற்கும், தமிழ் மொழியின் மாண்பிற்கும் மத்திய அரசு அறைகூவல் விடுத்துள்ளதாக குறிப்பிட்டார். விநாயகரை போற்றக்கூடாது என கூறவில்லை எனவும், தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதில் சமஸ்கிருத மொழியில் பாடியது கண்டனத்துக்கு உரியது என்றும் கூறினார்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை பாட விடாமல் தடுத்த சென்னை ஐஐடி நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்ட வைகோ, மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரியும், பொன்.ராதாகிருஷ்ணனும் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் பகுதியில் உள்ள முதியோர்
இல்ல விவகாரம் தொடர்பாக காவல்துறை முழு அறிக்கை வெளியிட வேண்டும் என தெரிவித்தார்.