கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 2 குழந்தைகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சுகாதாரத்துறை அங்கே தடுப்பூசி போடும் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர் 2 குழந்தைகள் உயிரிழந்திருப்பது பெற்றோர்ககளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மசக்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்த பிசாந்த் – விஜயலட்சுமி தம்பதியினருக்கு கிஷாந்த் என்ற 3 மாத ஆண் குழந்தை இருந்தது. விஜயலட்சுமி நேற்று முன்தினம் (பிப்ரவரி 17) தனது குழந்தைக்கு அருகே உள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்று இரண்டரை மாதத்தில் போட வேண்டிய தடுப்பூசியை சுகாதாரத்துறை செவிலியரிடம் போட்டார். தடுப்பூசி போட்ட பின்னர், அன்று மாலையே குழந்தை இறந்தது.
தடுப்பூசி போட்ட பிறகே குழந்தை இறந்ததாக பெற்றோர்கள் உறவினர்கள் புகார் கூறியதால், இறந்த குழந்தையின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில், குழந்தை நிமோனியா காய்ச்சலால் இறந்ததாக கூறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, கோவை சவுரி பாளையத்தை சேர்ந்த இரண்டரை வயது குழந்தை தடுப்பூசி போட்டு கொண்ட பின்னர், உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது. கோவையில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிறகு, அடுத்தடுத்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்ட பின்னர், 2 குழந்தைகள் இறந்ததாக எழுந்த புகார் தொடர்பாக, குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், “கோவையில் தடுப்பூசி போட்டு கொண்டதால் 2 குழந்தைகள் இறந்ததாக வந்த தகவல் தவறு. இறந்த குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டதாக கூறப்படும் தடுப்பூசி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியின் எதிர்வினை குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் இது தொடர்பாக ஆய்வு செய்ய உள்ளனர். இதுகுறித்து விசாரிக்க தனி கமிட்டியும் அமைக்கப்பட்டுள்ளது.
இறந்த குழந்தைகள் தடுப்பூசி போட்டு கொண்டதாக கூறப்படும் சவுரி பாளையத்திற்குட்பட்ட மசக்காளிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய முகாம், புலியகுளம் முகாமில் குழந்தைகள் இறப்புக்கு பின்பு தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் தகவல்களை சேகரித்தோம். இதில் சவுரிபாளையம் பகுதிக்குட்பட்ட முகாமில் 12 குழந்தைகளுக்கும், புலியகுளம் முகாமில் 18 குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது தெரியவந்தது. உடனடியாக அனைத்து குழந்தைகளும் அவர்களது வீடுகளுக்கே சென்று கண்காணித்தோம். அந்த குழந்தைகள் அனைவரும் நலமுடன் இருப்பது தெரியவந்தது. இருப்பினும் அந்த 30 குழந்தைகளையும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். ஏதாவது உடல்நிலை பாதிக்கப்பட்டால் தகவல் கொடுக்கவும் பெற்றோருக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
மேலும் இறந்த குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டதாக கூறப்படும் தடுப்பூசியையும் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம். தற்போது அந்த 2 முகாம்களிலும் தற்காலிகமாக தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்தி வைத்துள்ளோம். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணையும் நடத்தி வருகிறோம்.” என்று கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/vaccination-work-temporarily-stopped-in-coimbatore-after-death-of-2-children-248385/