Chinese firm wins contract for Sri Lanka wind and solar energy projects near Tamil Nadu coast : தமிழகத்தின் ராமேஸ்வரம் தீவிற்கு 45 கி.மீ தொலைவில் காற்றாலை மற்றும் சோலார் பேனல்களை அமைக்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தை கைப்பற்றியுள்ளது சீன நிறுவனம் ஒன்று. இலங்கையின் வடக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் யாழ்பாணத்திற்கு அருகே உள்ள மூன்று தீவுகளில் இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வர உள்ளது.
இலங்கையின் வார இதழான சண்டே டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த திட்டம் 12 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக உள்ளது என்றும் அதற்கான ஒப்பந்தத்தை சினோசர் – இடெக்வின் என்ற நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் சிலோன் மின்சார வாரியமும் சினோசரும் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளனர். சீனாவில் உள்ள காற்றாலைக்கான டர்பைன் தயாரிக்கும் கோல்ட்விண்ட் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது இடெக்வின் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த செய்தி குறிப்பில் மேலும், இலங்கை அரசு கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் டெர்மினல் அமைக்க செய்யப்பட்ட இந்தியாவுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்த சில நாட்கள் கழித்து இந்த அறிவ்ப்பு வெளியாகியுள்ளது.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த அறிவிப்பும் இது தொடர்பாக வரவில்லை. இலங்கையில் உள்ள அதிகாரிகள், இந்த திட்டத்திற்கு உலக அளவில் ஏலம் அறிவிக்கப்பட்டது. இந்தியாவின் மதிப்பீடு இந்த திட்டத்திற்கு போதுமானதாக இல்லை என்று குறிப்பிட்டனர். ஆசியன் டெவலப்மெண்ட் வங்கி இந்த திட்டத்தை செயல்படுத்த நிதி உதவி வழங்க உள்ளது. டெல்ஃப்ட், நைனத்தீவு மற்றும் ஆல்ந்தீவு பகுதிகளில் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
யாழ்பாண தீபகற்பத்தில் உள்ள பால்க் ஜலசந்தியில் இந்த மூன்று தீவுகளும் அமைந்துள்ளன. இதில் மிகப்பெரிய தீவான டெல்ஃப்ட் ராமேஸ்வரத்திற்கு தென்மேற்கே மிக அருகே அமைந்துள்ளது. இதற்கு இடையே தான் கச்சத்தீவு அமைந்துள்ளது. 1974ம் ஆண்டு இந்தியா இந்த தீவை இலங்கைக்கு கொடுத்தது. இதனை சுற்றியிருக்கும் பகுதியில் மீன் பிடிக்கும் போது தமிழக மற்றும் யாழ்ப்பாண மீனவர்களுக்கு இடையே பிரச்சனைகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.
இடெக்வின் சோலார் – காற்றாலை என்று ஒருங்கிணைந்த மின் உற்பத்தி திட்டத்தை இங்கு செயல்படுத்த உள்ளது. சினோசர்/இடெக்வின் நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை தர இலங்கையின் நாடாளுமன்ற நிலைக்குழு ஜூலை 18ம் தேதி முடிவு செய்தது. இது கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு கண்டெய்னர் முனையத்தின் வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் குறித்து இந்தியா மற்றும் ஜப்பானுடனான முத்தரப்பு ஒப்பந்தத்தை இலங்கை ரத்து செய்வதற்கு முன்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
souce https://tamil.indianexpress.com/india/chinese-firm-wins-contract-for-sri-lanka-wind-and-solar-energy-projects-near-tamil-nadu-coast-246308/