குடியரசுத் தினத்னன்று தேசிய தலைநகர் டெல்லியில் நடந்த போராட்டம் குறித்து சென்னையில் உள்ள பிரபல சிபிஎஸ்சி பள்ளி குறிப்பிட்ட அரசியல் பார்வையை மாணவர்களிடத்தில் முயற்சித்திருக்கிறது.
பத்தாம் வகுப்பு வினாத்தாளில், பி- பகுதியில் இடம்பெற்ற கேள்வி இங்கே:
” வேளாண் சட்ட போராட்டக்கார்கள் பொதுச் சொத்துக்களை அழித்து, காவல்துறை அதிகாரிகளை தாக்கிய சம்பவமும், குடியரசு தினத்தன்று தேசிய தலைநகரில் வெடித்த கொடூரமான வன்முறையும் இந்திய குடிமக்கள் இதயங்களில் அறுவருக்கத்தக்கதாய் அமைந்தது. நாட்டுக்கு முன் சுய நலம், சுய லாமம் முக்கியமில்லை என்பதை உணராது இடையூறு செய்யும் வன்முறையாளர்களை கண்டித்து உங்கள் நகரத்தில் செயல்படும் தினசரி நாளிதழ் தலையங்க ஆசிரியருக்கு கடிதம் எழுதுங்கள்.
எவ்வித காரணத்திற்காகவும் பொது சொத்துக்களை சேதப்படுத்துவது, தேசியக் கொடியை இழிவுபடுத்துவது, காவல் அதிகாரிகளை தாக்குவது போன்ற வன்முறை செயல்களை நியாயப்படுத்த முடியாது. மேலும், வெளிநாட்டு தூண்டுதலின் கீழ் செயல்படும் இத்தகைய வன்முறை வெறியாளர்களைத் தடுக்க சில நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் “என்று கேட்கப்பட்டது.
பள்ளியின் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வன்முறை வெறியாளர்கள், வெளிநாட்டு தூண்டுதல், தேசியக் கொடியை இழிவுபடுத்துவது, சுய நலம், சுய லாமம் போன்ற வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட அரசியல் சிந்தாந்தப் பார்வையை பிரதிபலிப்பதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த கேள்வி மூலம் ஒரு குறிப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை எடுக்க மாணவர்கள் நிர்பந்திக்கப்படுகின்றனர். மாணவர்களின் செயல் திறனையும், சமூகத்தின் மீதான் அவனது பார்வையையும் சோதிப்பதாக கேள்வி அமையவில்லை. கேள்வியில் மூலம் பதில் நேரடியாக உணர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களிடம் இருந்து வெறும் வார்த்தைகள் மட்டுமே எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது, மாணவர்கள் மத்தியில் ஒருவித பயத்தை ஏற்படுத்தும் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.