History and culture of Nilgiris Toda tribes : தமிழகத்தில் 36 பிரிவிர் பட்டியல் பழங்குடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் நீலகிரி மலைத்தொடர்களில் மட்டுமே 6 வகையான பழங்குடிகள் வசித்து வருகின்றனர். தொதவர், கோத்தர், குறும்பர், பணியர், காட்டுநாயக்கர், மற்றும் இருளர் என்று பழங்குடிகளின் நுண்ணுலகத்தையே நீலகிரியில் காணமுடியும். ஒவ்வொரு பிரிவினரும் இந்த மலைத்தொடர்களில் பல்வேறு இடங்களில் வசித்து வருகின்றனர். அவர்களின் வாழிடம் தொட்டு அவர்களின் பேச்சும், மொழிகளும், பழக்கவழக்கங்களும் வேறுபடும். இன்று நாம் தமிழகத்தில் உள்ள உயர் மலைச்சிகரங்களில் வசிக்கும் சைவப்பழங்குடிகளாக தொதவர்கள் குறித்து காண உள்ளோம்.
தொதவர்கள் அறிமுகமும் அவர்களின் வாழிட சிறப்புகளும்
தென்னிந்தியாவில் உள்ள உயர்ந்த மலைச்சிகரங்களில் வாழும் ஆயர் பழங்குடிகள் தான் தோடர்கள் என்று அழைக்கப்படும் தொதவ மக்கள். 2000க்கும் குறைவாகவே மக்கள் தொகை கொண்ட இவர்கள் ஓல் போஸ் என்ற தொதவ மொழியை இம்மக்கள் பேசுகின்றனர். பெரும்பாலும் இருமொழியாளர்களாகவே (tribal bilingualism) இருக்கின்றனர். தற்போது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பினை மேற்கொள்ளும் மக்கள் மும்மொழியாளர்களாக இருக்கின்றனர். தமிழ், தொதவம், மற்றும் ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர். தொதவ மொழிக்கு எழுத்துருக்கள் கிடையாது. மொழியாக்கம் மற்றும் மொழி தொடர்பான ஆராய்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மிகப்பெரிய கொம்புகளை கொண்டிருக்கும் நீர் எருமைகளை மேய்க்கும் இவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நீலகிரியில் இருக்கும் புல் நிலங்களையே நம்பி உள்ளனர். மிகவும் உயர்ந்த மலைகளில் இருந்தாலும் கூட சைவ உணவு பழக்க வழக்கங்களை கொண்டவர்களாக இருக்கின்றனர்.
மேலும் படிக்க : மழைக்கும் வெயிலுக்கும் தார்ப்பாய் குடிசை தான்… தமிழக பளியர்களின் இன்றைய நிலை என்ன?
“அவலாஞ்சியில் இருக்கும் மந்தில் இருந்து நான் திருமணம் செய்து கொண்டு இந்த மந்தில் குடி புகுந்தேன். இது என் கணவரின் பிறந்த இடமாகும். எங்கள் கோவில்கள் இருப்பதை போன்று தான் எங்களின் வீடுகளும் இருந்தன. மேலே அவுல் புல் (Nilgiris Grass) மேய்ந்த குடிசை ஒன்றில் தான் எங்களின் வாழ்க்கை மிகவும் எளிமையாக இருக்கும். திருமண சடங்குகளும் கூட மிகவும் எளிதாகவே இருக்கும். இயற்கை எங்களுக்கு அருளிய கொடையை வைத்தே நாங்கள் எங்கள் வாழ்வை வாழ்ந்து வந்தோம்” என்று வரவேற்றார் தொதவ குடிகளின் முதல் பட்டதாரியான வாசமல்லி.
நீலகிரியில் சுமார் 125 கிராமங்களில் தொதவர்களுக்கு அரசு பட்டாக்கள் வழங்கியுள்ளது. ஆனால் 85 கிராமங்களில் மட்டுமே இம்மக்கள் வசித்து வருகின்றனர். விழா காலங்களில் எருமைகளை மேய்த்து செல்ல மீதம் இருக்கும் கிராமங்கள் பயன்படும். அங்கே எருமைகளை தங்க வைத்து, விழாக்காலம் முடிந்த பிறகு மேய்த்துக் கொண்டு சொந்த கிராமங்களுக்கு அழைத்து வருகின்றோம். திருமணம், பிறப்பு, இறப்பு, வில் அம்பு சாஸ்த்திரங்கள் என்று சில முக்கியமான நிகழ்வுகளையும் மரபு குறையாமல் பின்பற்றி வருகின்றனர். இவர்கள் வாழும் கிராமங்கள் மந்துகள் என்று அழைக்கப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
எருமைகளுக்கும் தொதவர்களுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு
ஒருவரின் ஆநிறைகளை வைத்து அவர்களின் செல்வத்தை கணிப்பது பண்டைய தமிழக பாரம்பரியங்களில் ஒன்றாகவே இருந்தது. இன்றும் கூட தாங்கள் வாழும் கிராமங்களில் தங்களுக்கென்று தனியாகவும், கோவில்களுக்கு என்று தனியாகவும் எருமைகளை வைத்துள்ளனர். காலை மந்துகளில் இருந்து வெளியேறும் நூற்றுக்கணக்கான எருமைகள் மாலையில் தங்களின் கிராமங்களை நோக்கி நகர்ந்து வருகின்றன.
“கிராஸ் ப்ரீட் எருமைகளும் இந்த மந்தில் இருக்கிறது. ஆனால் ஒரிஜினல் தோடா எருமைகளின் கொம்புகளில் புள்ளிகளும், கழுத்தின் கீழ் ஒரு வெள்ளை நிற வளையமும் இருக்கும். அதன் மூலம் நாங்கள் நல்ல எருமைகளை அடையாளம் காண்போம். ஒவ்வொரு எருமைக்கும் பெயர்களும் உண்டு. தொதவ பாரம்பரியத்தில் எருமைகளுக்கு அத்தனை சிறப்பு உள்ளது. ஒவ்வொரு தொதவரும் இம்மண்ணில் இருந்து செல்லும் போது, அவருடன் சொர்க்கத்திற்கு செல்ல நாங்கள் எருமைகளை பலியிட்டு வந்தோம். சொர்க்கத்திற்கு செல்லும் நபர் தன்னுடைய சொத்தான எருமையை உடன் அழைத்து செல்கிறார் என்று நாங்கள் நம்புகின்றோம்” என்று வாசமல்லி தெரிவிக்கிறார்.
எருமை பால், மோர், நெய் மற்றும் வெண்ணெய் என்று தங்களின் தேவைகள் அனைத்தையும் எருமைகளை நம்பியே உள்ளது. கோவிலுக்கு இருக்கும் எருமைகளில் இருந்து பெறப்படும் பாலில் இருந்து பெறப்படும் மோர் எங்களுக்கு புனிதமாக உள்ளது. முந்தைய காலங்களில் மனிதர்களைக் காட்டிலும் எருமைகளுக்கு மதிப்பு மிக்க சடங்குகளை நாங்கள் நடத்தி வந்தோம் என்றும் அவர் கூறுகிறார்.
தொதவர்களின் இன வரலாறு
மானுடவியலாளர் முனைவர் பக்தவத்சல பாரதியின் “தமிழகப் பழங்குடிகள்” என்ற புத்தகத்தில் தொதவர்களின் இன வரலாறு குறித்து பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கருத்துகளை முன்வைத்துள்ளார். தொதவர்களின் கடவுள்களும், சுமேரியர்களின் கடவுள்களும் பெயர் ஒப்புமை கொண்டிருப்பதால் அவர்கள் சுமேரியாவில் இருந்து வந்தவர்கள் என்றும், எருமையை புனிதமாக கருதுவதாலும், உருவ அமைப்பும் அவர்கள் மெசபடோமியாவில் இருந்து வந்தவர்கள் என்றும் ஆராய்ச்சிளர்கள் கூறுவதை மேற்கோள் காட்டியுள்ளார். பண்பாட்டளவில் தென்னிந்தியர்களாக இருப்பினும் அவர்கள் தோற்றம், உருவ அமைப்பு, வழிபாட்டு முறைகள் தனித்துவம் வாய்ந்ததாகவே இருக்கிறது. இறந்த பின்பு கேரளம் செல்லும் வழியில் அமைந்திருக்கும் மலையை நோக்கி தங்களின் ஆன்மா செல்வதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.
புல்வெளியும் தொதவர்களும்
தொதவர்களின் வாழ்வாதாரம் முழுக்க முழுக்க புல்வெளியையும் மேய்ச்சல் எருமைகளையும் ஒரு காலத்தில் சார்ந்திருந்தது. புல் மலைகளுக்காக நன்கு அறியப்பட்ட பகுதிகளில் எருமைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வார்கள். ஆனால் ஆங்கிலேயர்களின் வருகைக்கு பிறகு, ஈரமும் மழையும் எந்நேரமும் இருக்கும் நீலகிரியில் வாழ்வதில் சிரமத்தை உணர்ந்தனர்.
”ஈரத்தையும் நீரையும் மொத்தமாக உறிஞ்சிக் கொள்ளும் தைலமரத்தை (Eucalyptus) நீலகிரியின் பல்வேறு பகுதிகளில் வளர்க்க துவங்கினர். அதனால் மேய்ச்சலுக்கான தங்களின் பாரம்பரிய நிலங்களை இழந்ததாக கூறுகின்றனர். தங்களின் கோவில்களுக்கு மேலே வேயப்படும் கூரையும் கூட புல்லால் ஆனது தான். இன்று இந்த அவுல்புல்லை தேடி செல்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. தவுட்டுப்பழம், சாப்பாட்டிற்காக பயன்படுத்தப்படும் முக்கிய இலைகளை கொண்ட மரங்கள் என அனைத்தும் அந்த பகுதிகளில் தான் வளரும். இன்று அது போன்ற புல்வெளி நிலங்களையும் எங்களால் பார்க்க முடியவில்லை. எங்களின் வருங்கால சந்ததியினருக்கு அறிமுகப்படுத்தவும் அங்கே செடிகள் ஏதும் இல்லை.
சோலைகளையும், புல்வெளிகளையும் மீள் உருவாக்கம் செய்கின்றோம் என்று கூறி காடுகளில் வளர்க்க வேண்டிய இடங்களில் புற்களை நடவு செய்கின்றனர். புற்கள் இருக்கின்ற இடத்தில் மரங்களை கொண்டு போய் வைக்கின்றனர். இன்னும் 100 வருடங்கள் ஆனாலும் தன்னுடைய சூழலுக்கு மாற்றான இடத்தில் எதுவும் வளரப்போவதில்லை. நீலகிரியின் கால சூழலை உணர்ந்து அதற்கேற்ற வகையில் மாற்றங்களை கொண்டு வர அரசு முயல வேண்டும்.
பல்வேறு கூறுகளில் ஆராய்ச்சிகளை நடத்த வேண்டும். ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் வருகிறார்கள். எங்கோ படித்ததையெல்லாம் எங்களிடம் வந்து கேட்டு இது உண்மையா என்று கேட்கிறார்களே தவிர, இன்றைய சூழல் என்ன என்பதை எங்கள் மூலமாக அவர்கள் தெரிந்து கொள்ள முற்படுவதில்லை” என்று வாசமல்லி கூறினார்.
source https://tamil.indianexpress.com/tamilnadu/history-and-culture-of-nilgiris-toda-tribes-245690/