வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

சசிகலாவுக்கு டபுள் செக்: அடுத்தடுத்து கதவுகளை அடைக்கும் முதல்வர் பழனிசாமி

 சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் தோழி சசிகலா தண்டனை காலம் முடிந்து கடந்த ஜனவரி 27-ந் தேதி விடுதலை செய்யப்பட்டார். ஆனால் விடுதலைக்கு முன்பே அவர் கொரோனா தொற்றால் பாதிப்பட்டதை தொடர்ந்து பெங்களூரு  விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மருத்தவமனையில் இருந்தபடியே விடுதலை செய்ப்பட்ட அவர், கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்டர்.

இந்நிலையில் சசிகலாவின் விடுதலை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆளும் அதிமுக அரசு தமிழகத்தில் சசிகலாவின் விடுதலையை மறக்கடிக்க பல வேலைகளை செய்துவருகிறது. இதில் கடந்த 27-ந் தேதி சசிகலா விடுதலையான போது தமிழகத்தில் அவரது விடுதலையை மறக்கடிக்கும் விதமாக சென்னை மெரினாவில்,பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட்டது.

இந்நிலையில் ஏற்கனவே ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக அறிவித்த தமிழக அரசு, அதனை ஜெயலலிதாவின் நினைவு இல்லமாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து,  இந்த பணி முடிவடைந்த நிலையில், கடந்த ஜனவரி 28-ந் தேதி ஜெயலலிதா நினைவு இல்லம் திறக்கப்பட்டது. தமிழக அரசு அடுத்தடுத்த 2 தினங்களில் ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் நினைவு இல்லம் திறக்கப்பட்ட நிகழ்வு தமிழகத்தில் சசிகலாவிற்கு எதிரான நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.

மேலும் தமிழகத்தில் சசிகலா மீண்டும் தனது அரசியல் பிரவேசத்தை தொடங்கிவிடக்கூடாது என முழு மூச்சாக களமிறங்கியுள்ள அதிமுக அரசு, சசிகலா வருகையை வரவேற்று போஸ்டர் ஒட்டிய இரண்டு அதிமுக நிர்வாகிகளை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளில் இருந்தும் அதிரடியாக நீக்கியது. இது ஒருபுறம் இருக்க கடந்த வாரம் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஜார்ச் செய்யப்பட்ட சசிகலா அதிமுக கொடியுடன் காரில் சென்ற சம்பவம் அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த தகுதி இல்லை என்று தெரிவித்தார். மேலும் கே.பி முனுசாமி, சசிகலா அதிமுக கட்சியில் இல்லை. இதனால் அவர் அதிமுக கொடியை பயன்படுத்தியது கண்டனத்துக்குரியது. தான் தவறை உணர்ந்து டிடிவி தினகரன் மன்னிப்பு கடிதம் கொடுத்தால், மீண்டும் கட்சியில் சேர்க்க பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய டிடிவி தினகரன், அதிமுகவின் பொது செயலாளர் சசிகலாதான். அதிமுக கொடியை பயன்படுத்த அவருக்கு எல்லா உரிமையும் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் தமிழகம் திரும்பும் சசிகலா ஒரு சட்டப்போராட்டத்தை தொடங்க உள்ளதாகவும், அமமுக கட்சி தொடங்கியதே அதிமுகவை மீட்டுக்கதான் என்று தெரிவித்துள்ளார்

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ச் செய்யப்பட்ட சசிகலா பெங்களூருவில் உள்ள ரிசார்ட்டில் தங்கியுள்ள நிலையில், அவர் வரும் 8-ந் தேதி சென்னை திரும்புவதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதனால் சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடம் மற்றும் நினைவு இல்லங்களை உரிமை கொண்டாடிவிடக்கூடாது என்றும், அவர் அப்பகுதிக்கு செல்லக்கூடாது என்றும் முடிவு செய்துள்ள அதிமுக அரசு, ஜெயலலிதா நினைவு இல்லம், மற்றும் மெரினா நினைவு இடம் ஆகியவற்றில் பார்வையாளர்களுக்கு தடை விதித்துள்ளது. இந்த நினைவிடங்கள் திறக்கப்பட்டாலும் பணிகள் முழுமைபெறாததாலும், பணி நடைபெற்று வருவதாலும், தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிமுக அரசின் இந்த நடவடிக்கை சசிகலாவிற்கு எதிரான நடவடிகையாகவே கருதப்படுகிறது. இதனால் தமிழகத்தில் சசிகலாவின் தமிழக அரசியல்களம் எப்படி இருக்கும் என்று பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு சசிகலா சிறை செல்வதற்கு முன், அதிமுகவின் பொதுச்செயலாளாக பதவியேற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து முதல்வராகவும் பொறுப்பேற்க இருந்த அவர் சிறை செல்லவேண்டி இருந்ததால், தனது ஆதரவாளர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார். அதன்பிறகு அவர் சிறை சென்றுவிட்ட நிலையில், சசிகலா முதல்வர் ஆகவேண்டும் என்பதற்காக தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர் செல்வம், ஜெயல்லிதா நினைவிடத்தில் தர்மயுத்தம் என்ற பெயரில், போராட்டம் நடத்தி மீண்டும் அதிமுகவுடன் இணைந்தார்.

இதனைத் தொடர்ந்து சசிகலாவின் பொதுச்செயலாளர் நீக்கப்பட்டு அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் என 2 புதிய பதவிகள் சேர்க்கப்பட்டது. இந்நிலையில், தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ள சசிகலா மீண்டும் அதிமுகவை பிடித்துவிடுவாரோ என்ற கலகத்தில் உள்ள அதிமுகவினர் அவருக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஜெயலலிதாவின் நினைவிடங்களை வாரிசு என்ற பெயரில் சசிகலா சொந்தம் கொண்டாட  முதல்வர் பழனிச்சாமி விரும்பவில்லை. தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்க நெருங்க, அதிமுக-வில் சசிகலா அடுத்து என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு பெருகி வரும் நிலையில், வரும் தேர்தலில் அதிமுகவின் வெற்றி விகிதம் எப்படி இருக்கும் என்பது கணிக்க முடியாத உள்றாக உள்ளது.

source : https://tamil.indianexpress.com/election/aiadmk-cm-palanisamy-seal-jayalalitha-memorials-against-vk-sasikala-245784/