பெங்களூரைச் சேர்ந்த 22 வயதான காலநிலை மாற்றம் செயற்பாட்டாளர் திஷா ரவியை டெல்லி காவல்துறை கைது செய்தது.
இதற்கு பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களை எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயல் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில், ” இந்தியாவை குரலை அடக்க முடியாது” என்று பதிவிட்டார்.
திமுக தலைவர் மு. க. ஸ்டாலின், ” திஷா ரவியின் கைது நடவடிக்கை என்னை அதிரிச்சியடைய வைக்கிறது. அரசை விமர்சிப்பவர்களில் சர்வாதிகார போக்கின் மூலம் மவுனமாக்குவது சட்டவிதிமுறைகள் கிடையாது. இதுபோன்ற தண்டனை நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து, கருத்து வேறுபாடுகளை உரிய முறையில் தீர்த்துக் கொள்ள மத்திய பாஜக அரசை நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்தார்.
திருமாவளவன் தனது ட்விட்டர் பதிவில், “சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயற்பாட்டாளர் திஷாரவி(22) அவர்கள், விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவாக ட்விட்டரில் கருத்துப் பதிவு செய்தார் என்பதற்காக அவரை தில்லியில் அமித்ஷா போலீசார் கைது செய்திருப்பதை #விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. அவரை உடனே விடுதலை செய்யவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பதிவில், “திஷா ரவி கைது செய்யப்பட்டதை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இந்த சர்வதிகார போக்குக்கு எதிராக அனைத்து மாணவர்களும், இளைஞர்களும் குரல் எழுப்ப வேண்டும்.
விவசாயிகளின் போராட்டத்தை ஆதர்க்க உருவாக்கப்பட்ட வழிகாட்டி கையேடு ஆவணம் ( டூல் கிட்) இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீனப் படையினரை விட மிகவும் ஆபத்தானது!
22 வயது நிரம்பிய மவுண்ட் கார்மல் கல்லூரி மாணவரும், காலநிலை ஆர்வலருமான திஷா ரவி தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எடுத்துக் கொள்ளப்பட்டால், இந்திய அரசு பலவீனமான அஸ்திவாரத்தில் நின்று கொண்டிருக்கிறது என்று பொருள். இந்தியா அபத்தமான நாடகமாக மாறி வருகிறது. டெல்லி காவல்துறை ஒடுக்குமுறையாளர்களின் கருவியாக மாறியது வருத்தமளிக்கிறது ” என்று பதிவிட்டார்.
முன்னதாக டெல்லி காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” போராட்டங்களுக்கு வழிகாட்டி கையேடு ஆவணத்தை ( டூல்கிட்) உருவாக்கியதிலும், அதை பரப்பியதிலும் முக்கிய சதிகாரராக செயல்பட்டார். Poetic Justice Foundation என்ற காலிஸ்தான் ஆதரவு இயக்கத்துடன் இணைந்து இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியை பரப்பினர்” என்று தெரிவித்தது.
மேலும், “டெல்லி காவல்துறை சைபர் பிரிவால் (சைபாட்) கைது செய்யப்பட்ட திஷா ரவி, இந்த டூல்கிட்டின் எடிட்டர்களில் ஒருவர். இந்த ‘டூல்கிட்’ ஆவணத்தை உருவாக்க வாட்ஸ்அப் குழுமத்தைத் தொடங்கியுள்ளார். ஆவணத்தை வடிவமைக்க ஒத்துழைப்பு வழங்கினார். இந்த செயல்பாட்டில், இந்திய அரசுக்கு எதிராக அதிருப்தியை பரப்ப Poetic Justice Foundation என்ற அறக்கட்டையுடன் அனைவரும் இனைந்து பணியாற்றினர்” என்றும் தெரிவித்தது.
source https://tamil.indianexpress.com/india/opposition-leaders-condemn-climate-activist-disha-ravis-arrest-toolkit-google-doc/