புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பிப்ரவரி 22ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி அரசுக்கு பொறுப்பு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு அரசு நடைபெற்று வருகிறது. புதுச்சேரி சட்டான்றத்தில் 30 இடங்களும் நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சேர்த்து மொத்தம் 33 எம்.எல்.ஏ.க்கள் இருப்பார்கள்.
புதுச்சேரியில் உள்ள பாகூர் தொகுதி எம்.எல்.ஏ. தனவேலுவின் எம்.எல்.ஏ பதவி கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டது. புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் டெல்லியில் பாஜக தலைவர்களை சந்தித்ததைத் தொடர்ந்து அவர்கள் ராஜினாமா செய்வதாக யூகங்கள் எழுந்துள்ளன.
புதுச்சேரியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ நமச்சிவாயம், தீப்பாய்ந்தான் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களைத் தொடர்ந்து, 3 நாட்களுக்கு முன்பு புதுச்சேரி காங்கிரஸ் எம்.எல்.ஏ-வும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சருமான மல்லாடி கிருஷ்ணாராவ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இவரையடுத்து, காமராஜ் நகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும் முதல்வர் நாராயணசாமிக்கு நெருக்கமாக அறியப்பட்டவருமான ஜான்குமார் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார். ஜான் குமார் இன்று சபாநாயகர் சிவக்கொழுந்தை பேரவையில் சந்தித்து ஜான்குமார் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால் புதுச்சேர் சட்டமன்றத்தில் காங்கிரஸ் – திமுக கூட்டணி எம்.எல்.ஏ.க்களின் பலம் 14 ஆக குறைந்துள்ளது. அதே போல, நியமன எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களின் பலம் 14 ஆக உள்ளது.
இதனால், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்றும் அதனால் அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அதிமுக, பாஜக உள்ளிட்ட்ட கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால், அவர்களின் கோரிக்கை நியாயமானதல்ல, எங்களுக்கு பெரும்பான்மை இருக்கிறது. அரசியல் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நாங்கள் செயல்படுவோம் என முதல்வர் நாராயண சாமி தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள் புதுச்சேரி ஆளுநரின் செயலர் சுந்தரேசன், சிறப்பு அதிகாரி தேவநீதிதாஸ் ஆகியோரிடம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கோரும் மனுவை அளித்தனர். இதில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட்டிருந்தனர்.
இதனிடையே, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடிக்கும் முதல்வர் பழனிசாமிக்கும் இடையே மோதல் போக்கு நிலவிவந்த நிலையில், கிரண் பேடி ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, தமிழிசை சௌந்தரராஜன் இன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதையடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்ஆர் காங்கிரஸ், அதிமுக எம்எல்ஏக்கள், பாஜக நியமன எம்எல்ஏக்கள் ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசினர். இந்த சந்திப்பின்போது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட கோரியதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி அரசு பிப்ரவரி 22ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இதனால், புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் நாராயணசாமி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
source https://tamil.indianexpress.com/india/puducherry-lieutenant-governor-tamilisai-soundararajan-order-to-floor-test-for-narayanasamy-govt-248237/