திங்கள், 8 பிப்ரவரி, 2021

69% இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு – மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

 தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு, நீதிபதி கன்வீல்கர் தலைமையிலான அமர்வுவில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 50 சதவீதத்துகு மேல் இடஒதுக்கீடு இருக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தீர்ப்பு இருப்பதாக கூறினார். ஆனால், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என அவர் வாதிட்டார்.

எனவே இந்த விவகாரத்தில் முடிவெடுக்க, வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என நீதிபதிகளுக்கு கபில்சிபல் கோரிக்கை விடுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு வழக்கறிஞர், 69 சதவீத இடஒதுக்கீடு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என வாதிட்டார். மேலும், இது அரசியல் சாசன பிரிவு 9-ன் கீழ் சட்ட பாதுகாப்பு பெற்றது என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

மராட்டிய இடஒதுக்கீடு வழக்கில் 50 சதவீதத்துக்கு மிகாமல் வழங்க வேண்டும் என கேட்கவில்லை என்று கூறிய தமிழக அரசு வழக்கறிஞர், தமிழகத்தின் 69 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு தனித்துவமானது என்றும், அதை பிற வழக்குடன் இணைத்து விசாரிக்கக்கூடாது எனவும் வாதிட்டர்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது குறித்து ஒரு வாரத்தில் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

source: https://www.news7tamil.live/69-case-against-reservation-supreme-court-orders-central-government.html